தமிழக அரசுக்கு எதிராக அவ்வப்போது வாள் சுழற்றி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், அமித் ஷா இன்று அலைபேசியில் அரைமணி நேரம் பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ள அவர் கோவிலம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து தென்சென்னை தொகுதி பாராளுமன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை மத்திய மந்திரி அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப் போது இருவரும் தமிழகத்தில் நிலவும் சூழல்கள் குறித்து விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அப்போது ஆர்.என்.ரவி அமித் ஷாவிடம் கேட்டதாக தெரிகிறது.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கே நீடித்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்த கருத்துக்களும் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இப்படி தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் பேசி தமிழக நிலவரம் குறித்து விவாதித்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal