மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கூட்டணி கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் சந்தித்த போதும், கூட்டணியில் இருக்கும் பலம் வாய்ந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சந்திக்க வில்லை. இதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். அவர் நேற்று இரவு 9.46 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்தார். அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகு மத்திய மந்திரி அமித்ஷாவை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பிரபலங்கள் சந்தித்து பேசினர். அவர்களை மத்திய மந்திரி அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் சாதனைகளுக்காக அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். அந்த வகையில், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், விண் டிவி தேவநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், ஆற்காடு நவாப் முகமது அப்துல் அலி, நவாப் சதா முகமது ஆசிப் அலி, அப்பல்லோ ஆஸ்பத்திரிகள் குழும செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, அப்பல்லோ ஆஸ்பத்திரிகள் குழுமத்தைச் சேர்ந்த விஜயகுமார் ரெட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற வீராங்கனை அனிதா பால்துரை, திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் ஆக்கி வீரர் பாஸ்கரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், செட்டிநாடு சிமென்ட் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, டேப்லெட்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜெய்கிஷன் ஜாவீர், பி.கே.எம். குழுமத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகரன், தாஜ் குழுமத்தைச் சேர்ந்த பிரமோத்ராஜன், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், அப்பல்லோ பல் மற்றும் டயாலிசிஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஜி.எஸ்.கே. வேலு ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளாக ஒவ்வொரு துறை ரீதியாக செய்த சாதனைகளை மத்திய மந்திரி அமித்ஷா விளக்கி கூறினார். மேலும், பல்வேறு துறையில் சாதனை படைத்த பிரமுகர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்புகளை அளித்து உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அவர்களின் சந்திப்பு நடைபெறவில்லை என்றும் அமித்ஷாவை சந்திப்பதற்கு அவர்கள் நேரம் கேட்கவில்லை என்றும் பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்தது.

இது பற்றி அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசியபோது, ‘‘அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பி.ஜே.பி. மேலிடம் வலியுறுத்தி வருகிறது. இது எடப்பாடி தரப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், வலுவான எதிர்க்கட்சி வரிசையில், எதிர்க்கட்சித் தலைவராக எடப்படி பழனிசாமி அமர்ந்தார்.

ஆனாலும், ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகியோரை அரவணைத்து செல்லுமாறு ‘மேலிடம்’ உத்தரவு போடுவது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை.இவர்கள் மூவருக்கும் செல்வாக்கு இல்லை. அதே சமயம், தேர்தலின் போது ‘விட்டமினை’யும் இறக்க மாட்டார்கள். எல்லாமே நாங்கள் செய்ய, செல்வாக்கு இல்லாதவர்களை எதற்காக ஒன்றிணைக்க வேண்டும் என்பது எடப்பாடி தரப்பின் வாதமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி நேரம் கேட்கவில்லை’’ என்றார்கள்.

அதே சமயம் பி.ஜே.பி. தரப்போ, ‘‘ தமிழகம் வரும் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி தரப்பு, ஓ.பி.எஸ். தரப்பு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டபோது. நீங்கள் இருவரும் ஒன்றிணைந்து வந்து அமித் ஷாவை சந்தியுங்கள் என்று பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர்கள் இருவரும் சந்திக்க நேரம் கேட்கவில்லை’’ என்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் மேகங்கள் மாறலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal