சிறுமிக்கு திருமணம் நடந்து முடிந்து, முதலிரவு அறையில் அதிகாரிகள் சிறுமியை மீட்ட சம்பவம்தான் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அன்புச்செல்வி உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

சிறுமியின் முகவரி மற்றும் வாலிபரின் முகவரியை கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் செட்டிக்குளம் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளுக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டி புது வண்ணார் தெருவை சேர்ந்த பெரியசாமி-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் மாரிமுத்து (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது. அதிகாரிகள் விசாரித்தபோது மாப்பிள்ளையும், பெண்ணும் முதலிரவு அறைக்கு சென்று விட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை அழைத்து வரும்படி கூறினர். இதையடுத்து உறவினர்கள் அவர்களை வெளியே அழைத்து வந்தனர்.

மேலும் அதிகாரிகள் விசாரித்தபோது மாரிமுத்து, சிறுமியின் சொந்த அத்தை மகன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும், இருவீட்டாரும் பேசி முடிவு செய்து திருமணத்தை நடத்தி வைத்ததும் தெரியவந்தது. அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களை கண்டித்து சிறுமியை மீட்டு விருதுநகர் சைல்டு லைன் காப்பகத்தில் சேர்த்தனர். 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார். அதன் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சிறுமியை திருமணம் செய்த மாரிமுத்துவை கைது செய்தார்.

மேலும் வாலிபரின் பெற்றோர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal