காதலன் கண் முன் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த காதலியும் இரண்டாவது முறை தற்கொலை முயற்சித்து உரிழந்தார்!
கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது21). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். பிரசாந்தும், செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த தன்யா (18) என்ற பெண்ணும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து 2 வீட்டு பெற்றோரும், பிரசாந்த் மற்றும் இளம்பெண்ணின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். பெற்றோர் சம்மதத்தின் பேரில் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர்.
கடந்த 5-ந் தேதி பிரசாந்தின் காதலியான தன்யாவுக்கு பிறந்த நாள். காதலியின் பிறந்த நாளை கொண்டாடவும், அவருக்கு வாழ்த்து சொல்லவும் பிரசாந்த், கடந்த 4-ந் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் மதுபோதையில், தன்யாவின் வீட்டிற்கு சென்றார். கேக்குடன் சென்று தன்யாவை வெளியே வரும்படி கூறி அழைத்தார். நள்ளிரவில் வந்து சத்தம் போட்டதால் தன்யாவின் பெற்றோர், பிரசாந்த்தை கண்டித்தனர். அப்போது அங்கிருந்த தன்யாவின் தாய்மாமாவான விக்னேசுக்கும், பிரசாந்த்துக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, விக்னேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரசாந்தை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேசை கைது செய்தனர். இதற்கிடையே தனது காதலன், தன் கண்முன்பாக வெட்டி கொல்லப்பட்டதால் தன்யா மிகுந்த மன வருத்தத்துடனேயே இருந்தார். யாரிடமும் பேசாமல், தனி அறைக்குள் முடங்கி கிடந்தார். பெற்றோர் ஆறுதல் கூறியும் அவர் சமாதானம் அடையவில்லை. காதலன் இறந்த துக்கத்தை எண்ணி நாள்தோறும் கவலையடைந்தார். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டில் இருந்த தன்யா திடீரென விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் அவரை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்கு வந்த பின்னரும், அவர் தனது காதலன் கொல்லப்பட்டதை நினைத்து வருந்தினார். இதனால் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். மகள் தொடர்ந்து மனவேதனையில் இருந்ததால், மீண்டும் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு விடக்கூடாது என்பதால் அவரது பெற்றோர் அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்தனர். அவர்கள் வெளியில் செல்ல வேண்டிய தேவை இருந்தால் தன்யாவுக்கு உதவியாக அவரது பாட்டியை வைத்து விட்டு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.
நேற்று தன்யாவின் தாய், தந்தை இருவரும் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர். மாணவி தனியாக இருப்பதால் அவருக்கு துணையாக அவரின் பாட்டியை வீட்டில் இருக்க சொல்லி விட்டு சென்றனர். வீட்டில் தன்யாவும், அவரது பாட்டியும் மட்டுமே இருந்தனர். தன்யாவுக்கு தனது காதலன் இல்லாத உலகத்தில் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. அவன் சென்ற இடத்திற்கே சென்று விடுவது என நினைத்து தான் முதலில் தற்கொலைக்கு முயன்றார்.
ஆனால் பெற்றோர் காப்பாற்றி விட்டனர். இதனால் மீண்டும் அவரது மனதில் தற்கொலை எண்ணம் தோன்றியது. உடன் பாட்டி இருந்ததால், அவரை வெளியில் அனுப்ப முடிவு செய்த தன்யா, தனது பாட்டியிடம், தனக்கு வயிறு வலிப்பதாகவும், அதற்கு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி வா என்று தெரிவித்து, அவரை வெளியில் அனுப்பி வைத்தார். பாட்டியும் பேத்தி கூறியதை உண்மை என நம்பி மருந்து வாங்க கடைக்கு சென்றுவிட்டார். பாட்டி சென்ற பின்னர் தனது அறைக்குள் சென்ற தன்யா, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்யாவின் பாட்டி, மருந்து கடைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தன்யாவை காணவில்லை.
இதனால் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியானார். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் பாட்டி கதறி அழுதார். மேலும் தனது மகனுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். அவர்களும் விரைந்து வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலன் கொல்லப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த இளம்பெண் முதல் முறை தற்கொலைக்கு முயன்று, உயிர் பிழைத்த நிலையில், 2-வது முறையாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.