தமிழகம் வரும் அமித்ஷா பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தநிலையில் அமித்ஷாவின் பயண திட்டம் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக அரசு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வெற்றிக்கை தேவையான இடங்களை இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் தங்களுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் ஏற்கனவே களப்பணியை தொடங்கிவிட்டது. தமிழகத்தில் மட்டும் 9 தொகுதிகளை குறிவைத்து பாஜக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தென்சென்னை, வேலூர், கன்னியாகுமரி, கோவை, நெல்லை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இதற்காக வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் அந்த தொகுதிகளில் அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தையும், மத்திய அமைச்சர்களையும் அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவிற்கு 5 தொகுதிகளை அதிமுக வழங்கியது.

ஆனால் இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது. இதற்கிடையே நாளை தமிழகம் வரும் அமித்ஷா அதிமுக பொதுச்செயலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் அப்போது பாஜகவிற்கு ஒதுக்கும் தொகுதிகள் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நாளை தமிழகம் வரும் அமித்ஷவின் பயண திட்டம் வெளியாகியுள்ளது. நாளை இரவு 9மணிக்கு விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷாவிற்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கவுள்ளனர். இதனையடுத்து சென்னை கிண்டி ஐ டி சி நட்சத்திர ஒட்டலில் இரவு தங்க உள்ளார். அப்போது பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது . இதனையடுத்து தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியாக இருக்கும் கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

ஜி.கே.வாசன், தேவநாதன் யாதவ், ஏசி சண்முகம், மற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின் 11ஆம் தேதி காலையில் பாஜகவின் பாராளுமன்ற பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் கோவிலம்பக்கத்தில் காலை 11மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை முட்ந்த பின் மதியம் 2மணிக்கு வேலூரில் நடைபெறவுள்ள மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal