அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணியில் இருந்த மைத்ரேயன் திடீரென்று இ.பி.எஸ். அணிக்கு மாறினார். அதன் பிறகு மீண்டும் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றார். இந்த நிலையில்தான், இந்நிலையில், தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.

1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் டாக்டர் மைத்ரேயன். அதிமுகவில் இணைவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளில் மைத்ரேயன் இருந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. அந்தச் சமயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார். அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார். இதனால்,கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, அதிமுகவில் இருந்து மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பிலும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்து வந்த மைத்ரேயன் பாஜகவில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சிடி ரவி முன்னிலையில், பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார் மைத்ரேயன்.

பாஜகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் மைத்ரேயன் கூடியவிரைவில் அக்கட்சியில் இணைவார் என சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் டெல்லியில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்துள்ளார்.

அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இரவு தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் மைத்ரேயனை பாஜகவில் சேர்த்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு தாவினர். இந்நிலையில், அதிமுக மாஜி எம்.பியை தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக!

‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று அவ்வப்போது கூறியவர்தான் மைத்ரேயன். பா.ஜ.க.வில் நீடிப்பாரா? அல்லது அங்கிருந்து மாறிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal