முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் பந்தியில் ஒன்றாக பக்கம் பக்கமாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் முகாமின் முன்னணி தளகர்த்தருமான வைத்திலிங்கம் இல்ல மண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரன் பக்கம் பக்கமாக அமர்ந்து நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என வைத்திலிங்கம் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியின்றி சாப்பிடுவதற்காக விஐபி டைனிங் ஹாலுக்கு சென்றனர். ஜே.சி.டி., பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கு.ப.கிருஷ்ணன். செந்தமிழன், வெல்லமண்டி நடராஜன் என முக்கிய பிரமுகர்கள் ஒரே வரிசையில் சாப்பிட அமர்ந்தனர்.
அப்போது ஒவ்வொரு வாழை இலையும் பெரிது பெரிதாக இருந்ததால் டேபிளில் பாதி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் இடபற்றாகுறை ஏற்படும் சூழல் உருவானது. டிடிவி தினகரன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது வாழை இலையை பாதியாக மடக்கி, அதில் சாப்பாடு வைக்கச் சொல்லி சாப்பிட்டார்.
வடை, பாயாசம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், பொறியல், கூட்டு, என மெனுவில் ஏராளமான பண்டங்கள் இடம்பெற்றிருந்தன. டிடிவி தினகரனோ கொஞ்சமாக சாதம் வாங்கி அதில் சிறிதளவு சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் கொஞ்சமாக பெயருக்கு சாதம் வைக்கச் சொல்லி வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டார்.
இதற்கிடையே வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் சம்பார், காரக்குழம்பு, பாயாசம், ரசம், கூட்டு, பொறியல் எல்லாமே சூப்பர். ஆனால், சசிகலா கலந்துகொள்ளாததுதான், ‘வடை போச்சே..!’ என்ற கதையாகிவிட்டது!