தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சாப்பாடு மெனுவை அரசு டோட்டலாக மாற்றியுள்ளது. அரிசி கஞ்சிக்கு டாட்டா சொல்லிவிட்டு இட்லி, சிக்கன் குழம்பு, சப்பாத்தி என விதவிதமான சாப்பாடுகளை இனி சிறைவாசிகள் ருசிக்கப் போகின்றனர்.

தமிழ்நாட்டில் புழல் மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய சிறை என மொத்தம் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இதை தவிர 14 மாவட்ட சிறைகள், 96 சப் ஜெயில்கள், 8 சிறப்பு ஜெயில்கள், 3 திறந்தவெளி சிறைகள் இருக்கின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த சிறைவாசிகளுக்கு கொடுக்கப்படும் உணவு கொஞ்சம் கூட ருசியில்லாமலும், ஊட்டச்த்து இல்லாமல் இருப்பதாகவும் பல ஆண்டுகளாக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். காலையில் அரிசி கஞ்சி, மதியம் சிறிது சாதம், தண்ணீருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சாம்பார், வெந்தும் வேகாததுமாக காய்கறி, அவ்வப்போது முட்டை என்பது மட்டுமே சிறைக்கைதிகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வருகிறது.

குற்றம் புரிந்துவிட்டு சிறைகளுக்கு சென்றவர்களுக்கு இப்படிப்பட்ட சாப்பாடு போட்டால் தான் அவர்கள் மறுபடியும் சிறை செல்ல துணிய மாட்டார்கள் என்பது அதிகாரவர்க்கத்தினரின் குரலாக இருந்து வந்தது. ஆனால் மனித உரிமை ஆர்வலர்களோ, “சிறைக்கைதிகளும் மனிதர்கள்தான். அவர்கள் திருந்துவதற்கான இடமாக சிறைச்சாலைகள் இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் இடமாக இருக்கக்கூடாது” என வாதிட்டு வந்தனர்.

இந்நிலையில்தான், சிறைச்சாலை உணவு மெனுவில் தமிழக அரசு அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. விதவிதமான, சுவையான உணவுகளை இனி சிறைக்கைதிகள் ருசிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட போகின்றன என்று இங்கு பார்க்கலாம். முதல் மாற்றமாக, இனி சிறைக்கைதிகளுக்கு பிரதான உணவாக வழங்கப்பட்டு வந்த அரிசிக் கஞ்சி, மெனுவில் இருந்தே தூக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலாக இனி ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் கோதுமை உப்புமா மற்றும் தேங்காய் – வேர்க்கடலை சட்னி சிறைக்கைதிகுக்கு வழங்கப்படவுள்ளது. அதேபோல, மற்ற நாட்களில் இட்லி – சாம்பார், எலுமிச்சை சாதம் – தேங்காய் பொறிக்கடலை சட்னி வழங்கப்படும். மதியவேளை உணவாக ஏ – வகுப்பு சிறைவாசிகளுக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு இனி சிக்கன் குழம்பு வழங்கப்படும். பி – வகுப்பு சிறைவாசிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சிக்கன் குழம்பு கிடைக்கும்.

இரவு நேர உணவாக தமிழக சிறைகளில் சப்பாத்தி நுழையவுள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சப்பாத்தியும், சைடு டிஷ்ஷாக சன்னாவும் வழங்கப்படும். மற்ற நாட்களில் சாதமும், காய்கறி கூட்டும் இரவில் வழங்கப்படும். இனி அனைத்து நாட்களிலும் காலையும், மாலையும் சிறைக்கைதிகளுக்கு சுடச்சுட தேநீர் கொடுக்கப்படும். மாலை நேரத்தில் தேநீருடன் கருப்புக் கொண்டைக்கடலை, நிலக்கடலை, பச்சைப்பயறு ஆகியவை ஸ்நாக்ஸாக வழங்கப்படவுள்ளது.

மற்ற கைதிகளுக்கு இதுபோன்ற உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பி வகுப்பு வெஜிடேரியன் சிறைவாசிகளுக்கு இனி சாதத்துடன் உருளைக்கிழங்கு பொறியல், ரவா கேசரி, வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகியவை கிடைக்கும். ஏ – வகுப்பு சிறைவாசிகளுக்கு சாதம், நெய், ரசம், காரக்குழம்பு, சாம்பார், காய்கறி கூட்டு, தயிர் சாதம், வாழைப்பழம் அல்லது கொய்யா பழம் கிடைக்கும்.

இந்த புதிய மெனுவால் தமிழக அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.26 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal