தமிழகத்தைப் பொறுத்தளவில் அவ்வப்போது பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்களுக்கிடையேயான ‘வார்த்தைப் போர்’ வந்து மறைவது வழக்கம்..!

இந்த நிலையில்தான் பாஜக குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முன்னணி பிரமுகருமான ராஜன் செல்லப்பா அடித்துள்ள கமென்ட் ஒன்று கூட்டணியில் புகைச்சலை கிளப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் அக்கட்சிக்கு தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பே இல்லை எனவும் ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார். இது பாஜகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்பதையும் அடித்தாலும், பிடித்தாலும் இங்கு திமுக, அதிமுகவுக்கு மட்டுமே மக்கள் மத்தியில் அங்கீகாரம் உள்ளது என்பதையும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒரு காலத்தில் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் மெஜாரிட்டியாக திகழ்ந்தது என்றும் ஆனால் அது போன்ற நிலை இன்று இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில் என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இன உணவுர்வும், மொழி உணர்வும் முக்கியம் என்றும் இதனால் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தமிழ்நாட்டில் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை எனவும் கூறிய ராஜன் செல்லப்பா, தேசியக் கட்சிகளுக்கு கிளை அமைப்பே இல்லாத நிலை தான் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில் ராஜன் செல்லப்பா விமர்சித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal