ஐபிஎல் கோப்பையுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் வாழ்த்துப் பெற்றுள்ளனர். தீவிர கிரிக்கெட் ரசிகரான முதல்வர் ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடிய பல போட்டிகளை நேரில் கண்டு ரசித்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.

சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே அணி பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளை நேரில் சென்று பார்த்து ரசித்தார் முதல்வர் ஸ்டாலின். மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகரான முதல்வர் ஸ்டாலின், சென்னை அணியின் வெற்றியைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின்கீழ் 5-வது ஐபிஎல் கோப்பையை வென்ற மஞ்சள் படைக்கு வாழ்த்துகள். இது மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டி. நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி சாம்பியன் கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். சிஎஸ்கே அணியின் ரசிகரான முதலமைச்சர் ஸ்டாலினிடம், வெற்றிக் கோப்பையைக் கொடுத்து வாழ்த்துப் பெற்றுள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர். அப்போது, மிகுந்த மகிழ்ச்சியுடன் கோப்பையை கையால் வாங்கி பார்த்தார் முதல்வர் ஸ்டாலின்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal