ஓ.பி.எஸ்., டி.டி.வி., வைத்திலிங்கம் ஆகியோர் போட்டு வைத்திருந்த கணக்கை தகர்த்தெறிந்திருக்கிறார் எடப்படி பழனிசாமி!
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின், மகன் திருமணம் நாளை நடக்கிறது. ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், இந்த கல்யாணத்தில், ஓபிஎஸ் + சசிகலா & டிடிவி தினகரன் என 3 பேரையும் ஒன்றாக இணைக்க போவதாக பிளானில் இருந்தார் வைத்திலிங்கம்.
அதாவது, சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஆகியோர் இந்த விழாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் வைத்திலிங்கம் ஆசைப்பட்டார். அந்தவகையில், திருமண மேடையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றாக மேடையேற்றவும் முடிவு செய்திருந்தார்.
கடந்த வாரம், அமமுக பொதுச்செயலாளர் தினகரனையும் சந்தித்து திருமண பத்திரிகையை தந்து அழைத்துள்ளார் வைத்தி. இந்த சந்திப்பு மொத்தம் 30 நிமிடங்கள் நீடித்துள்ளது. அப்போது, வைத்திலிங்கத்திடம், “காதல் திருமணமா? பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமா?” என்றெல்லாம் விசாரித்திருக்கிறார் தினகரன். இதனையடுத்து, “சின்னம்மாவுக்கு பத்திரிகை வைத்து விட்டீர்களா? “என்று தினகரன் கேட்டாராம்.. அதற்கு வைத்திலிங்கம், “இன்னும் இல்லை.. இனி தான் வைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். அதே போல் நேரில் சசிகலாவுக்கும் பத்திரிகை வைத்துவிட்டார் வைத்திலிங்கம்.
ஓபிஎஸ் தலைமையில் தஞ்சையில் நடக்கும் வைத்திலிங்கம் இல்ல திருமணத்திற்கு சசிகலா வரும்பட்சத்தில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு நிச்சயம் நடக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தினகரன் + சசிகலா இடையில் இணக்கமான சூழல் சமீபகாலமாக இல்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த திருமணத்தில் சுமூக சூழல் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆக, 3 பேருமே அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதால், அதிமுக அரசியல், நாடாளுமன்ற தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்வது, பாஜக உறவு குறித்தெல்லாம் நிறைய விவாதிப்பார்கள் என்றும், எடப்பாடிக்கு எதிரான அரசியலை நிச்சயம் பேசுவார்கள், பிறகு, 3 பேரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை ஒன்றாக சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.. ஆக மொத்தம், ஓபிஎஸ்,-சசி,-தினகரன் சந்திப்பானது, அதிமுக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் லேசான கலக்கம் கவ்வியதாகவும் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து மோதினால் வலிமையானதாக இருக்கும், எடப்பாடி தரப்பும் நினைத்ததாக கூறப்பட்டது.
ஆனால், அத்தனை கணக்குகளும் சுக்குநூறாக உடைந்துவிட்டன. சசிகலா கல்யாணத்துக்கு வரவில்லையாம். இத்தனைக்கும் வைத்திலிங்கம் மீது அபரிமிதமான நம்பிக்கையை சசிகலா வைத்திருக்கிறார். ஆனாலும், இந்த கல்யாணத்துக்கு வரமுடியாமல் போவதற்கு காரணம் திவாகரன்தான் என்கிறார்கள். காரணம், எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான போக்கை திவாகரன் கொண்டிருக்கிறாராம். இதெல்லாம் தெரிந்தும்கூட, திவாகரனுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் வைத்திலிங்கம். அப்படியிருந்தும்கூட, தானும் கலந்து கொள்ளாமல், சசியையும் கலந்து கொள்ள வேண்டாம் என்று தடுத்ததாக சொல்கிறார்கள். எப்படியாவது 3 பேரையும் ஒரே மேடையில் ஏற்றிவிட வேண்டும் என்று நிறைய பிளான்களை வைத்திலிங்கம் போட்டிருந்த நிலையில், அத்தனையும் காணாமல் போயுள்ளது.
அப்படியிருந்தும் ஏதாவது ஒரு மாற்றம் கடைசி நேரத்தில் வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே, இப்படித்தான், ஓபிஎஸ்ஸின் திருச்சி மாநாட்டில் இவர்கள் 3 பேரும் இணைய போவதாக சொன்னார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால்தான், இந்த முறை இவர்களின் சந்திப்புக்கு திவாகரன் மூலம் எடப்பாடி பழனிசாமி “செக்” வைத்ததாக சொல்கிறார்கள்.
அத்தனை கேள்விகளுக்கும் நாளை விடை கிடைத்துவிடும்… அதுவரை காத்திருப்போம்..!