அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்களில் ‘தொடர் சங்கிலி’ சோதனையை நடத்தி வருகிறது வருமானவரித்துறை.
இந்த நிலையில்தான் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கு, வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நோட்டிஸிற்கு, ‘கால அவகாசம்’ தேவை என அசோக் தரப்பில் இருந்து கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என ‘அரசியல் பார்வையாளர்கள்’ சிலரிடம் பேசினோம்.
‘‘சார், அ.தி.மு.க.வில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது யாரையும் மதிக்கமாட்டார். உதாரணத்திற்கு ஒரு சம்பவம், தங்கமணி தனது மகன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பதற்காக செந்தில்பாலாஜியின் இல்லத்திற்கு (அரசு குடியிருப்பு) சென்றார். மடியில் இருந்த செந்தில் பாலாஜி அழைப்பிதழை பெறுவதற்கு கீழே வரவில்லை.
பல மணி நேரங்கள் காத்திருந்த தங்கமணி, பி.எஸ்.ஓ.விடம் சொல்லிவிட்டு, தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி மடியில் இருந்து இறங்கிய தலைமைச் செயலகம் சென்றார். (அன்றைய தினம்தான் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, தங்கமணியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது தனிக்கதை)!
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டி.டி.வி.தினகரனிடம் சென்றவர், அங்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்தவுடன் தி.மு.க.விற்க சென்றார். செந்தில் பாலாஜியைப் பொறுத்தவரை யாரையுமே வியக்கும் அளவிற்கு செயல்படக் கூடியவர். அந்த வகையில் தி.மு.க. தலைமையே எதிர்பார்க்காத வகையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘டானிக்’கை கொடுத்து, தனக்கான முக்கியமான இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது, தி.மு.க. மகளிர் அணியில் சில விஷயங்களில் மூக்கை நுழைத்து தி.மு.க.விற்குள்ளேயே உட்கட்சி பூசலை உண்டு பண்ண நினைத்தவர்தான் செந்தில் பாலாஜி. தற்போது வருமான வரித்துறையில் வசமாக சிக்கியிருக்கிறார். இதற்கு முன்பு நடந்த ரெய்டு போல இது இல்லை.
ஏனென்றால், வருமான வரித்துறை அதிகாரிகளையே தாக்கியதால், அதிகாரிகளும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு எதிராக கிடைத்த ஆதாரங்களை வைத்து, அவருக்கு அரசியல் ரீதியாகவே ‘செக்’ வைக்கலாம். எனவே, செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான்’’ என்றனர்.
ஏற்கனவே, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்து, எம்.பி., பதவியை இழந்து நிற்கிறார் செல்வகணபதி! ஒரு கால கட்டத்தில் செந்தில் பாலாஜியைப் போல் தேர்தல் வியூகம் வகுப்பதில் செல்வகணபதியும் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது!