தமிழகத்தில் தங்களது இரண்டு ஆண்டுகால ஆட்சியை ‘‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற பெயரில் திமுக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, ‘‘ஆறாக பெருகி ஓடும் கள்ளச்சாராயம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் புழக்கம், அமைச்சர்களின் ஊழல் முறைகேடுகள்’’ என பெரிய லிஸ்ட் போட்டு கொந்தளித்து வருகிறார்.
இவற்றை தடுக்க தவறி விளம்பர அரசை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதையொட்டியே மாநிலம் தழுவிய அளவில் நேற்றைய தினம் (மே 29) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுகவினர் நடத்தி காட்டினர். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், போதிய அளவில் கூட்டம் திரண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு செல்ல, அவர் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளார். அடுத்தகட்டமாக புதிய அசைன்மென்ட் ஒன்றை கட்சியினருக்கு வழங்கியுள்ளார். அதாவது, உள்ளாட்சி அளவில் இருக்கும் பிரச்சினைகளை கையிலெடுப்பது.
இதன்மூலம் மக்கள் நேரடியாக சம்பந்தப்படும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைவரது கவனமும் அதிமுக பக்கம் திரும்பும் என கணக்கு போட்டுள்ளார். இதையும் மாநில அளவில் பேசுபொருளாக மாற்றி ஆளும் திமுக ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதன் பின்னணி குறித்து விசாரித்தால் டெல்லியில் இருந்து எடப்பாடி தரப்பிற்கு சில சிக்னல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிவைத்து ஆட்சியில் வெளிப்படும் சர்ச்சைகளை விஸ்வரூபம் எடுக்க வைக்க வேண்டும். நேரடியாக சில நெருக்கடிகளை நாங்களும் தரவுள்ளோம். அதற்கு உதாரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை, அமைச்சர்கள் மீதான எஞ்சியுள்ள வழக்குகளை தூசு தட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே உங்கள் தரப்பில் இருந்தும் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற வகையில் சில விஷயங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு டெல்லி தான் கிரீன் சிக்னல் கொடுத்தது. இந்த வரிசையில் அதிமுக மற்றும் எடப்பாடிக்கு சிக்கலை உண்டு பண்ணும் வழக்குகள், நபர்களை ஓரங்கட்ட தயாராக இருப்பதாக அடுத்த சர்ப்ரைஸ் வெடியை கொளுத்தி போட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிசாமி உற்சாகத்துடன் அடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். இவ்வாறு டெல்லியும், எடப்பாடியும் கைகோர்த்து மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக அஸ்திரங்களை ஏவினால் 2024 மக்களவை தேர்தலில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி மூத்த உடன் பிறப்புக்களிடம் பேசிய போது, ‘‘சார், வெளிநாட்டில் இருந்து முதல்வர் வந்தவுடன் ‘மாற்றத்தை’ ஏற்படுத்த வேண்டும். ஆளும்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டும் நிலையில், ஆளுங்கட்சியினரையே அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மதிப்பதில்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சி வேலை பார்ப்பார்கள். தேர்தல் சமயத்தில் மட்டும் பணம் கொடுத்தால் போதுமா..? இதன் வெளிப்பாடுதான் தஞ்சையில் அமைச்சர் மற்றும் எம்.பி. எதிரிலேயே உடன் பிறப்புக்கள் கொந்தளித்தனர். எனவே, இனியாவது முதல்வர் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.