சென்னை மற்றும் ஓசூரில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யப் போவதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் உச்சத்தை தொட்டது. காலை 10 மணிக்கு கூட வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பமும், அனல் காற்றும் சகட்டுமேனிக்கு தாண்டவம் ஆடியது. நேற்றுடன் கத்தரி வெயில் முடிந்தது என வானிலை மையம் தான் அறிவித்ததே தவிர, சூரியனிடம் அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சென்னை மட்டுமல்லாமல் மதுரை, நாமக்கல், ஈரோடு, நெல்லை, வேலூர், கோவை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில்தான், சூப்பரான அறிவிப்புடன் தமிழ்நாடு வெதர்மேன் வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஆந்திராவில் இருந்து தமிழக எல்லையை நோக்கி வந்த புயல் காற்று வலுவிழந்து ஓசூருக்கும், சென்னைக்கும் மேலே சுற்றி வருகிறது. இதனால் அடுத்த சில மணிநேரங்களில் சென்னையில் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்யப் போகிறது. ஓசூரில் பயங்கர சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்க போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திருநின்றவூர், அம்பத்தூர், ஆவடி, கிண்டி, கேகே நகர், வடபழனி, தி நகர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மீனம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், ஆதனூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.