ம.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்திருக்கிறார்.

மதிமுகவின் மூத்த தலைவர்களுல் ஒருவரும், கட்சியின் அவைத்தலைவருமான திருப்பூர் துரைசாமி அண்மையில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், “மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவிற்கே சென்று விட்டனர்.

திமுகவில் தங்களுக்கு ஒரு இடர்பாடு வந்த போது எந்த குடும்ப அரசியலுக்கு எதிராக தொண்டர்களை தூண்டினீர்களோ அன்று ஒரு நிலைப்பாடும், இன்று அதற்கு நேர் எதிர்மாறாக தங்களின் குடும்பத்தினருக்கு தன்னிச்சையாக கழகத்தில் பொறுப்பு வழங்க முயற்சிக்கும் போது தொண்டர்கள் மத்தியில் தாங்கள் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பதும் மகனை ஆதரித்து, அரவனைப்பதும் தங்களின் சந்தர்பவாத அரசியலையும் பொது வெளியில் கழகத்தினரின் மீது தமிழக மக்கள் எள்ளி நகையாட வைத்துவிட்டது என்பதை தாங்கள் இன்னமும் உணராமல் உள்ளது வருந்ததக்க வேதனையான நிகழ்வு” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கட்சியின் நலன் கருதி மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று வைகோவிற்கு கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து துரைவைகோவிற்கு பொறுப்பு வழங்கியதற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த திருப்பூர் துரைசாமியை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாகிகள் தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் முடித்துவிட்டு, தமிழக திரும்பிய பிறகு அவரை சந்தித்து தி.மு.க.வில் திருப்பூர் துரைசாமி இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal