அடுத்தடுத்த முறைகேடுகளில் சிக்கும் பாஜகவின் பல்வேறு அணி நிர்வாகிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக- அதிமுக கட்சிக்கு மாற்றாக பாஜகவை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உறுப்பினர்கள் சேர்க்கையானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொலை, கொள்ளை, மோசடி என பல வழக்குகளில் சிக்கியவர்கள் பாஜகவில் இணையும் நிலையும் ஏற்பட்டது. இந்த தகவல் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆருத்ரா மோசடி, கள்ளச்சாராய விற்பனை, கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கும் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு என கூறப்படும் தகவல் பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவானது. .இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களுக்கு அதிரடி உத்தவிட்டுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு தொடர்பாக மாவட்ட தலைவர்களோடு அண்ணாமலை காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதாக தெரிவித்தார். இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 25 பேரை எம்பியாக்கி டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்காக மாவட்ட தலைவர்கள் கட்சி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் சாதனைகளை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்க வேண்டும் என தெரிவித்தவர், இதற்காக பொதுமக்களை சந்தித்து பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை எடுத்து கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் 70 ஆண்டு கால திராவிட ஆட்சியை அகற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதாக கூறினார்.
தமிழகத்தில் பொறுத்துவரை பாஜகவில் 20க்கும் மேற்பட்ட அணிகள் உள்ளதாக தெரிவித்தவர், இதில் பலர் கள்ளச்சாரய விற்பனை போன்ற முறைகேடான பணியில் ஈடுபட்டு வருவதாக விமர்சித்தார். எனவே பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை அந்த அந்த மாவட்ட தலைவர்கள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.