தமிழகத்தில் இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுதினம், “ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 31-ம் தேதி “ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 1 ம் தேதி “ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28.05.2023 முதல் 30.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையில் 38-39 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
குமரிக்கடல், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், இலட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இன்று முதல் வரும் 1-ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.