தமிழக முன்னாள் முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தின் ரூ 10 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் கல்லால் குழு அறக்கட்டளையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் ரூ 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
ரவீந்திரநாத்தின் நிறுவனத்திற்கு கல்லால் நிறுவனத்திடம் இருந்து ரூ 8.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடாய லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமிழ் குமரனின் ரூ 15 கோடி மதிப்பிலான திநகர் இல்ல சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
ஓபி ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக ராஜ்யசபா எம்பியும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் ஒரு மனுவை அளித்திருந்தார். அதில் தேனி எம்பி ரவீந்திரநாத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதால் அவருக்கு அதிமுக எம்பி என்ற அங்கீகாரத்தை வழங்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதால் சி.வி.சண்முகம் அளித்த கடிதத்தின் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என எம்பி ரவீந்திரநாத், மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இதனால் அவர் அதிமுக எம்பியாகவே தற்போது வரை தொடர்கிறார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சினையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான போது ஓபிஎஸ், அவருடைய மகன் ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கினார். தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராகிவிட்ட எடப்பாடியிடம்தான் கட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி எதிராக காய்நகர்த்தும் ஓ.பி.எஸ். மகனின் சொத்தை முடக்கிய அமலாக்கத்துறை, அடுத்து, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, தரமில்லாத வீடுகளை கட்டியது… அதன் மூலம் கிடைத்த வருவாய் என அடுத்து ஓ.பி.எஸ்.ஸை குறி வைத்து காய்நகர்த்தும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!