ஒருபக்கம் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வரும் நிலையில், விரைவில் அமலாக்கத்துறையும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஆனாலும் வருமான வரித்துறை இந்த ரெய்டிற்கான காரணம் குறித்து முறையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இந்த போக்குவரத்து துறை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறை அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் அமலாத்துறை சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இதே கேசில்.. உயர் நீதிமன்றம் விசாரணையை ரத்து செய்யும் முன்பும் செந்தில் பாலாஜிக்கு சம்மன் சென்றுள்ளது. ஆனால் அப்போது விசாரணைக்கு ஆஜராகாமல் செந்தில் பாலாஜி பின்னர் விளக்கம் கொடுத்துள்ளார். கோர்டில் விசாரணையில் இருந்து ஆஜராக விலக்கும் கேட்டுள்ளார். இந்த நிலையில்தான் தற்போது உச்ச நீதிமன்றம் கொடுத்த அனுமதியினால், அமலாக்கத்துறையும் அவருக்கு சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வருமான வரித்துறை ரெய்டு முடிந்ததும் அது தொடர்பான அறிக்கை வெளியாகும். இந்த அறிக்கை வெளியானதும் பின்னர் அமலாக்கத்துறை வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்களையும் கூட விசாரணைக்கு பயன்படுத்திக்கொள்ளும்

இதனால் அமலாக்கத்துறை வழக்கிலும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்து வருகின்றன. 100க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த ரெய்டில் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிங்கள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

ரெய்டு முடிந்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வருமானவரித்துறை சார்பாக தனியாக வழக்குகள் பதியப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal