செந்தில் பாலாஜி….

இந்தப் பெயர் அ.தி.மு.க.விலும் சரி, தி.மு.க.விலும் சரி… ‘லைம் லைட்டில்’ இருந்துகொண்டேதான் இருக்கிறது!

காரணம், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மூத்த அமைச்சர்களின் தலைகளே உருண்ட நிலையில், செந்தில் பாலாஜி கெத்தாக வலம் வந்தார்! ‘அம்மா’ குடிநீர்… இரட்டை இலை சின்னத்துடன் கூடிய மினி பஸ்… ஒரே நேரத்தில் லட்சம் பேர் மொட்டை… என ஜெயலலிதாவையே வியக்கவைத்தார். அதன் பிறகு தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு, ஆண்டாண்டு காலமாக இருக்கும் சீனியர்களே வியக்கும் அளவிற்கு முக்கியத்துவமும், முக்கியத்துறைகளையும் கொடுத்து அழகுபார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில்தான், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 26&ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும், அவருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் முறை நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உறவினர்கள் என தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை 26&ந்தேதி காலை 7 மணி முதல் பரபர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக், மின்சாரத்துறை தொடர்புடைய அரசு ஒப்பந்தாரர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெறும் சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் சோதனையால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது தி.மு.கவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபமாக அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் வந்தன. டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், பார் டெண்டர் ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.டி ரெய்டு நடக்கும் இடங்களில் திமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை, கரூர் உட்பட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடப்பதையொட்டி, அங்கெல்லாம் திமுகவினர் குவிந்து வருவதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை விசாரணை திரும்பும் என்று சமீபத்தில் கூட பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘வெயிட் பண்ணுங்கண்ணா அமலாக்கத்துறை கொஞ்சம் பிஸியா இருக்காங்க. முடிச்சிட்டு இங்கதான் வருவாங்க. விரைவில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள்’’என்று கூறினார்.

இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அப்போதே பதில் அளித்து இருந்தார். அதில், ‘‘அண்ணாமலை எப்போது அமலாக்கத்துறை இயக்குநரா? அல்லது அவர் இணை இயக்குநரா? ஒன்றிய அரசில் அவர் என்ன நிதி அமைச்சராக இருக்கிறாரா? அரவக்குறிச்சியில் தோல்வி அடைந்து ஓடினாரே.. அவர் தானே? என்ன பொறுப்பில் இருக்கிறார் அவர்? அந்த பக்கமே அவரை பார்க்க முடியவில்லையே? அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்? தன்னிச்சையாக செயல்பட கூடிய அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேசலாம். அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவது வெட்ட வெளிச்சம் ஆகிறது’’என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வருமான வரித்துறை மூலம் வளைக்கப்பட்டு உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal