வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய நிகழ்வு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடன் பிறந்த தம்பி அசோக் வீடு அருகே தான் இந்த கார் தாக்குதல் நிகழ்வு அரங்கேறியது.

வருமான வரித்துறை சோதனை வரலாற்றில் இது போன்ற தாக்குதல்களை இதற்கு முன்னர் யாரும் நடத்திடாத நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் எல்லை மீறிய நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சோதனை நடத்த வந்த பெண் அதிகாரி ஒருவரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் ரவுண்ட் கட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிகழ்வும் நடந்துள்ளது. இது போன்ற செயல்கள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தான்பின்னாட்களில் பெரும் பின்னடைவை தரும் என்பதை ஆதரவாளர்கள் சற்றும் யோசிக்கவில்லை.

பொதுவாழ்க்கை என வந்துவிட்டால் சோதனைக்கு அப்பாற்பட்டவர் என யாரும் இருக்க முடியாது. இந்த யதார்த்தத்தை புரிந்திருந்தால் வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டிருக்காது. இதனிடையே இந்த விவகாரம் வருமான வரித்துறையின் டெல்லி தலைமை அலுவலகம் வரை எதிரொலிக்கும் என்பதால் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பிடி இன்னும் தீவிரமாக் இறுகுமே தவிர தளர வாய்ப்பேயில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal