தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்ட அத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உயிரிழந்தவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர்களும் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய கண்மூடித் தனமான துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தவர்களின் உருவப்படத்திற்கு திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம். எல்.ஏ., சண்முக எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் தூவிநினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி, ‘‘தூத்துக்குடி சுற்றுச்சூழலை பாதுகாக்க ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம், எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்’’என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal