‘அட இப்படியொரு பேரணியா..?’ என ஆளுங்கட்சியே வியக்கும் அளவிற்கு ‘மெர்சல்’ காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த அதே நாளில் சென்னையை திணறடித்திருக்கிறது அதிமுக பேரணி!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி 2 ஆண்டுகளைக் கடந்து 3-வது ஆண்டில் பயணிக்கிறது. ஆளும் திமுக அரசு எத்தனையோ பல நல்ல திட்டங்களை இடைவிடாமல் செயல்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிகழும் பல்வேறு சம்பவங்கள், திமுக ஆட்சியிலும் நடைபெறுகின்றன. பொதுவாக இத்தகைய நிகழ்வுகளை எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் இருப்பை வெளிக்காட்டவும் நிலைநிறுத்தவும் கையில் எடுப்பது வழக்கம்.

ஆனால் திமுக ஆட்சியில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, உட்கட்சி பூசல்களால் நீதிமன்ற படிகளேறித்தான் போராடிக் கொண்டிருந்தது. இத்தகைய நிகழ்வுகளின் பக்கம் கவனம் செலுத்தி ஒரு எதிர்க்கட்சிக்குரிய பணியை செய்யாமல் இருந்து வந்தது. இந்த இடைவெளியை பாஜக உள்ளிட்ட கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முனைந்தன. நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி; அதிமுக அடித்துக் கொண்டு நிற்கிறார்கள் என பாஜக தலைவர்களே ஏகடியம் பேசியதும் வெளிப்படையாக நிகழ்ந்தது.

தற்போது அதிமுகவின் உட்கட்சிப் பூசல் என்பது பெருமளவு முடிவுக்கு வந்துவிட்டது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையை சட்டப்பூர்வமான வாய்ப்புகள் அனைத்தும் உறுதி செய்துவிட்டன. தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என அனைத்துமே எடப்பாடி பழனிசாமியைத்தான் அதிமுக புதிய பொதுச்செயலராக- தலைவராக அங்கீகரித்துவிட்டன. இது அதிமுக தொண்டர்களுக்கு மிகப் பெரும் புத்துணர்ச்சியை கொடுத்து வந்தது. ஆமாம் எங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்திருக்கிறது; எடப்பாடி பழனிசாமியின் தலைமைதான் ஒரிஜினல் அதிமுக என்பதை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதைத்தான் இன்றைய சென்னை பேரணி மூலம் உறுதி செய்துவிட்டனர் அதிமுகவினர்.

கள்ளச்சாராய சாவுகளுக்கு ஆளும் திமுக அரசை அதிமுக கடுமையாக விமர்சித்து வந்தது. இதுவரையில் வெற்று அறிக்கைகளோடு நிறுத்திக் கொண்ட அதிமுக இப்போதுதான் களத்துக்கு வந்துள்ளது. சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று திமுக அரசுக்கு எதிராக மனு கொடுப்பதாக அதிமுக தலைமை அறிவித்தது. அதுவும் மே 22-ந் தேதி! அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மே 22-ல்தான் அதிமுக ஆட்சிக் காலத்தில் 13 உயிர்கள் காவு வாங்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

அதே நாளில் பிரம்மான்ட பேரணியை நடத்துவது என அதிமுக தலைமை திட்டமிட்டே திட்டமிட்டிருந்தது. இன்று அந்த திட்டமிடல் சோடை போகாத அளவுக்கு பெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டியது அதிமுக. சென்னை சைதாப்பேட்டை ஆளுநர் மாளிகை நோக்கிய சாலைகளில் அதிமுகவினர் வெள்ளம் போல திரண்டிருந்தனர். அதிமுகவின் அத்தனை அணிகளும் அதுவும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சம அளவில் பங்கேற்க திக்குமுக்காடிப் போனது போக்குவரத்து!

அதுவும் பதில் சொல்! பதில் சொல்! ஸ்டாலினே பதில் சொல்! என தொடங்கி திமுக அரசுக்கு எதிரான முழக்கங்கள் அப்பகுதியை அதிரவைத்தன. அதுவும் தமது கரகரத்த குரலில் மாஜி அமைச்சர் வளர்மதி உற்சாகத்துடன் முழக்கங்கள் எழுப்ப இன்னமும் ஆராவாரம் ஆனது அப்பகுதி. பொதுவாக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி போவதும் ஆளுநரிடம் மனு கொடுப்பதும் ஒரு எதிர்க்கட்சியின் பணிதான். எதிர்க்கட்சியின் கடமைதான்.

இத்தனை காலம் அதனை செய்யாமல் இருந்த அதிமுக இன்று அதை நிறைவேற்றி இருக்கிறது. அதுவும் தங்களது மீது கடும் விமர்சனங்கள் எழக் கூடிய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு நாளில் அதை மறந்து சென்னை பேரணியை பேச வைத்திருப்பதன் மூலம் மாஸ் எதிர்க்கட்சி என்பதை சொல்லி அடித்துள்ளது அதிமுக என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal