இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030&-2031 நிதி ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு லட்சிய இலக்காகக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலாற்றி வருகிறார்.

இந்த இலக்கினை அடைந்திட, ரூ.23 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். இந்த நோக்கத்திற்காக, தொழில்துறை பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை அரசு நடத்தி வருகிறது.

இதன் மூலம் ஜூலை 2021 முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, தமிழ்நாட்டில் 2,95,339 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் மற்றும் 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், இந்தத் திட்டங்கள் பரவலாக அமைய உள்ளன.

பல்வேறு துறை சார்ந்த கொள்கைகள், தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை 2021. தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை 2021, தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022. தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை 2022, தமிழ்நாடு எத்தனால் கலவைக் கொள்கை 2023 மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டம் போன்ற பல்வேறு துறை சார்ந்த கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், வரும் ஜனவரி 2024-ல் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் 9 நாள் அரசு முறைப் பயணமாக, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டு சென்றார். இதையொட்டி இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு சென்னை விமானநிலையம் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றிருந்தார். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமை செயலாளர் இறையன்பு, மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, இனிகோ இருதயராஜ், தி.மு.க. தலைமை நிலைய செயலாளரான வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் துறைமுகம் காஜா, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரான குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் துணை மேயர் காமராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வந்திருந்து வழியனுப்பி வைத்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரசு உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா 2 நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் சென்று விட்டார். இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனையும், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகத்தையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் மற்றும் கேப் பிட்டாலாண்டு இன்வஸ் மன்ட் அதிபர்கள் முதன்மை செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளார்.

இன்று மாலை நடை பெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டி, என் டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலை கழகமான சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.

இன்றும், நாளையும் சிங்கப்பூரில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஜப்பான் புறப்பட்டு செல்ல உள்ளார். அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal