வருமானத்தை மீறி அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் செய்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் திமுக ஆட்சி 2021 ஆம் ஆண்டு அமைந்ததும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கள், காமராஜ், கேசி வீரமணி, கேபி அன்பழகன் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் வீட்டில் கடந்த ஆண்டு ஜனவரி சோதனை நடைபெற்றது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் அன்பழகன் பெயரிலும் அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரிய வந்தது.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கேபி அன்பழகன் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்தநிலையில் தருமபுரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே கேபி அன்பழகன் மீது 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 45.20 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வாங்கு குவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் அடிப்படையில் 27 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு சொத்துகள் குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் வழக்கு பதிவு செய்ததை விட கூடுதல் மதிப்புகளை பதிவு செய்துள்ளனர். அதன்படி தனது குடும்பம் மற்றும் நிறுவனங்களில் பெயர்களில் 35கோடியே 79 லட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.