கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவிக்கு எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர் பதவி தங்கள் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதேபோல் முதல்வர் பதவிகேட்டு சிவகுமாரும், சித்தராமையாவும் உறுதியாக இருப்பதால் இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறியது. முன்னதாக இதுகுறித்து முடிவெடுக்க கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் தலைமையை சந்தித்து தனது விருப்பங்களை தெரிவித்தனர். தமக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகவும், ஏற்கனவே இதுதான் தன்னுடைய கடைசி தேர்தல் என அறிவித்ததால் தனக்கே முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார். அதேபோல டி.கே.சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

என்னால் தான் கர்நாடகாவில் வெற்றி பெற்றோம் என்று இரு தரப்பும் வாதத்தை வைக்க காங்கிரஸ் தலைமை குழம்பியது. கர்நாடக முதல்வராக யாரை அறிவிப்பது என்பதில் பெரும் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா அடுத்த கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு போட்டியாளரான டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் துணை முதல்வர் பதவியை டி.கே.சிவக்குமார் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி, மாநில அமைச்சரவையில் அவருக்கு முக்கிய இலாகாக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்தராமையாவின் பதவியேற்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் என தெரிகிறது.

மேலும் மற்றொரு தகவலின்படி, முதல் 3 வருடங்களுக்கு சித்தராமையாவும், அடுத்த 2 வருடங்களுக்கு டி.கே.சிவகுமாரும் முதல்வராக பதவி வகிப்பார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதுவும் ஏன் என்றால், வரவிருக்கின்ற அதாவது 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடிக்க நிச்சயம் காங்கிரஸ் 5 மாநில தேர்தல்களில் குறிப்பிட்ட வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

இந்த நிலையில் டி.கே.சிவகுமாருக்கு முதல் 2 அல்லது 3 வருடங்களுக்கு கர்நாடக முதல்வர் பதவி கொடுத்தால், பாஜக டி.கே.சிவகுமார் மீது ஏற்கனவே உள்ள வழக்குகளை தூசித்தட்டும். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கக்கூடும். 2024 தேர்தலின் போது இது பேசுபொருளாக மாறக்கூடாது என்பதாலே சித்தராமைய்யாவுக்கு முதல்வராக முதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal