‘கமிஷன்… கரெப்ஷன்… கலெக்ஷன்…’ என்ற வாசகம் யாருக்கு பொருந்துமோ, பொருந்தாதோ திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றிய தி.மு.க.விற்கு பொருந்தும் என்று உருகுகிறார்கள் உடன் பிறப்புக்கள்..!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது கமிஷன்… கலெக்ஷன்… கரெப்ஷன் என குற்றச்சாட்டி வருகிறார் அது எந்த யூனியனுக்குப் பொருந்துமோ… பொருந்தாதோ உப்பிலியபுரம் யூனியனுக்கு பொருந்தும் என்று உண்மையான உடன் பிறப்புக்கள் உள்ளுக்குள் குமுறி வருகிறார்கள்.

இது பற்றி உப்பிலியபுரத்தில் உள்ள உண்மையான உடன் பிறப்புக்களிடம் பேசினோம்.

‘‘சார், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, உப்பிலியபுரம் ஒன்றியத்தைப் பொறுத்தமட்டில், தற்போதைய மாவட்ட கவுன்சிலர் தீபா சின்ராஜ்தான், கையிருப்பைக் கரைத்து கட்சியைக் காப்பாற்றி வந்தார். மாவட்டக் கவுன்சிலர் ஆன பிறகும், கட்சி பாகுபாடின்றி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

சமீபத்தில் கொரோனா நிவாரண நிதி கொடுக்க அமைச்சர் கே.என்.நேருவின் மகன் பச்சைமலைக்கு வந்தபோதுக்கூட, அனைத்து செலவுகளையும் தீபா சின்ராஜ்தான் செய்தார். ஏன், தி.மு.க.வில் உறுப்பினர் படிவத்திற்கு ரூ.5 லட்சத்தை செலுத்தியவரும் தீபா சின்ராஜ்தான். ஆனால், ஒன்றியத்தில் பந்தாவாக வலம் வருபர், செலவு என்றால் செல்போனை ஆஃப் செய்துவிடுகிறார். ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோதே அரசு அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு கனிம வளங்களை கொள்ளையடித்தார். ஆளுங்கட்சியாக இருக்கும் போது சொல்லவா வேண்டும்?

அமைச்சர் கே.என்.நேரு உப்பிலியபுரத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்தால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். இல்லாவிட்டால், தோல்வியடைவது உறுதி’’ என்று உடன் பிறப்புக்களே அடித்துக் கூறி வருகின்றனர்.

செலவு செய்வது ஒருவர்; கல்லா கட்டுவது வேறொருவர் என்ற புலம்பல்தான் உப்பிலியபுரம் உடன்பிறப்புக்களின் புலம்பலாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal