தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைரேந்திரபாபு ஆகியோர் அடுத்த மாதம் 30 ஆம் தேதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய தலைமசெயலாளர் மற்றும் டிஜிபி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அப்போது தலைமை செயலாளராக இறையன்பையும், டிஜிபியாக சைலேந்திர பாபுவையும் நியமித்தனர். இதனையடுத்து கடந்த 2 வருடங்களாக தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொண்ட இருவரும் அடுத்த மாதம்(ஜூன் 30 ஆம் தேதி) ஓய்வு பெறவுள்ளனர். இதனையடுத்து தலைமைசெயலாளர் இறையன்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய பதவி கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டார். அந்தவகையில், தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்குவது இந்த துறையின் முக்கிய பணியாகும்,

தற்போது தலைமை ஆணையராக இருந்த ராஜகோபால் பதவி காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அந்த இடத்தில் இறையன்பு நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபுவும் அடுத்த மாதம் பணி ஓய்வு பெறவுள்ளார். அவருக்கு டி.என்.பி.எஸ்.சி தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த தகவல்கள் உறுதிப்படுத்தாத நிலையில் தமிழகத்தில் இரண்டு முக்கிய பொறுப்புகள் ஒரே நேரத்தில் காலியாகவுள்ளதால் அந்த இடங்களை பிடிக்க ஏற்கனவே போட்டிகள் அதிகரித்துள்ளது. அதில் தற்போது பல துறையின் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முருகானந்தம், அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், சிவதாஸ் மீனா, கார்த்திகேயன், எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இவர்களில் சிவதாஸ் மீனா போட்டியில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஓய்வு பெறவுள்ளநிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கு சீனியாரிட்டி அடிப்படையில் தமிழ்நாடு அரசு பட்டியல் தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் சங்கர் ஜிவால், விஸ்வநாதன், ஆபாஷ் குமார், சீமா அகர்வால் ஆகியோர் பெயர்களை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சங்கர் ஜிவால் மற்றும் விஸ்வநாதன் இடையே கடும் போட்டி உள்ள நிலையில், தற்போதைய சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் முன்னனியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே புதிய தலைமைசெயலாளர் மற்றும் டிஜிபி தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal