தமிழக அமைச்சரவை மாற்றம் உறுதியாகிவிட்டது. ‘இலாகாக்கள்’ மாற்றம் தான் தலைமைக்கு மட்டும் தெரிந்த ரகசியமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் தி.மு.க.வின் மூத்த அமைச்சர் துரைமுருகனை நேற்று சந்தித்த பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘அமைச்சரவை மாற்றம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’’ என்றவரிடம், ‘‘நிதித்துறை உங்களுக்கு கொடுக்கப் போகிறார்களாமே?’’ என கேட்டதற்கு, ‘‘அப்படியா?- ஓகே’’ என்றார்.

அதன் பிறகும் விடாத பத்திரிகையாளர்கள், ‘‘அமைச்சரவையில் புதியவர்கள் இடம்பெறுகிறார்களாமே?’’ என்று கேட்டதற்கு, ‘‘உங்களுக்கு தெரிந்த விஷயம் கூட எனக்குத் தெரியவில்லை. இதெல்லாம் நீங்கள் சித்தரஞ்சன் சாலையில் மைக்கை வைத்துக் கொண்டு கேட்க வேண்டியது. நான் வெளியூரில் இருந்து இப்போதுதான்வந்திருக்கிறேன். இரண்டு நாட்கள் இங்கே இல்லையென்றால், நடப்பது எதுவும் தெரியாது.

சென்னைக்கு வந்தவுடன் ஸ்டாலின் வீட்டிற்கு சென்றேன். அவர் அதற்குள் காரில் ஏறி தனியார் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றார் என்னிடம். நான் தலைமைச் செயலகம் போகிறேன். என்றேன். அதற்கு, போங்கள் நானும் வருகிறேன் என்றார். அதன் பிறகு, நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றார். நானும் மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்துவிட்டேன்’’ என பதிலளித்தார்.

தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஒருவருக்கே அமைச்சரவை மாற்றம் இலாகா மாற்றம் தெரியாதா என்ன? தி.மு.க. தலைமையில் என்ன நடக்கிறது என மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

‘‘சார், அமைச்சரவை மாற்றம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பே முடிவெடுக்கப்பட்டு விட்டது. துரைமுருகனிடம் இருக்கும் நீர்வளத்துறை கேன்.என்.நேருவிடமும், கனிமவளத்துறை தங்கம் தென்னரசுவிடமும் கொடுக்க ‘தலைமை’ முடிவு செய்துவிட்டது.

அதே போல், துரைமுருகனுக்கு கலைஞர் காலத்தில் கொடுக்கப்பட்ட சட்டத்துறையை கொடுக்கலாம் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். அதற்கு, முதல்வரிடமே துரைமுருகன் குரலை உயர்த்தி பேசிவிட்டாராம்! ‘உங்கள் உடல்நிலையைப் பொறுத்துத்தான் இலாகாவை மாற்ற முடிவு செய்திருக்கிறோம்’ என்றதற்கு, ‘எனக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது. என்னுடைய பணிகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எதற்காக மாற்றம்?’ என குரலை உயர்த்தி பேசியிருக்கிறார்! இதனால்தான், சில இலாகாக்கள் மாற்றம் பற்றிய முடிவை முதல்வர் தற்போதைக்கு தள்ளி வைத்திருக்கிறார்’’ என்றார்!

தி.மு.க.வில் உள்ள மூத்த அமைச்சர்கள் சிலரே அதிருப்தியில் இருப்பதாகவும் அறிவாலய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வருகிறது. இன்று இரவுக்குள் இலாகா மாற்றம் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal