புதுவை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. பங்கேற்றனர். இவர்களின் அரசியலை தமிழகத்தில் வைத்துக் கொள்ளட்டும் என கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார்.
கவர்னர் பேச்சுக்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறும்போது, தெலுங்கானா அரசு விமானம் தருவதில்லை. அதனால் புதுவையிலேயே கவர்னர் தமிழிசை இருக்கிறார். உண்டியல் குலுக்கியாவது விமான டிக்கெட் எடுத்து தருகிறேன். அவர் புதுவையை விட்டு செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து புதுவையில் கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏழைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்க ஜிப்மர் முடிவு எடுத்தவுடன், கட்டணம் அதிகமாக இருப்பதால் குறைக்கும்படி மத்திய சுகாதார மந்திரியை தொடர்பு கொண்டு பேசினேன். கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதியை உயர்த்தி வழங்கியுள்ளது. ஜிப்மர் செயல்பாடுகள் குறித்து எம்.பி.க்கள், இயக்குனரை நேரடியாக சந்தித்து கேட்கலாம். நான் ஆஸ்பத்திரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன்.
மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. கவர்னர் கருத்தே சொல்லக்கூடாதா? என் கருத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. மக்களிடம் உண்டியல் குலுக்கி சிறப்பு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்புவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அதையும் மக்களிடத்தில் இருந்துதான் பெற வேண்டுமா? நீங்கள் சேர்த்து வைத்ததில் வாங்கி கொடுத்தாலும், அதில் நான் ஏற மாட்டேன். நான் பொதுமக்களுடன்தான் விமானத்தில் பயணிக்கிறேன். சிறப்பு விமானம் பயன்படுத்துவதில்லை. என்னை அனுப்புவதைப்பற்றி நாராயணசாமி கவலைப்பட வேண்டாம்.
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமலும் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ரகம் நான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். நான் எனது பணியை செய்கிறேன். அனைவரும் போராட்டம் நடத்தாமல் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று நான் கேட்கவில்லை? நான் ஜிப்மருக்கு வக்காலத்து வாங்கவில்லை. பொதுமக்கள் மீது அதிக அக்கறை எங்களுக்கு உள்ளது.
விசாகா கமிட்டி அரசு அலுவலகங்களில் அமைப்பதை பரிசீலிப்போம். மருத்துவம், பள்ளி, பொதுமக்கள் சேவை எந்த விதத்திலும் மக்கள் பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுகிறோம். புதுவை முதல்-அமைச்சர் கோரிக்கைகளை வைத்தாலும், கையெழுத்து போடுவதில்லை என கூறுவது தவறு. அடுத்தடுத்து அறிவிப்புகள் வருவதை நீங்களே பார்க்கலாம். புதுவையில் எல்லாம் சரியாக நடக்கிறது’’ இவ்வாறு அவர் கூறினார்.