தமிழகம் முழுவதிலும் தி.மு.க. ஆட்சியமைத்து இரண்டாண்டு நிறைவடைந்ததையொட்டி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடியில் நடந்த தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. அதே சமயம், அதற்கு முதல் நாள் மங்கப்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், பொதுமக்கள் எழுச்சியுடன் பங்கேற்கவில்லை.

திருச்சி புறநகர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இது பற்றி நடுநிலையுடன், கமிஷன்… கலெக்ஷனை எதிர்பார்க்காமல் இருக்கும் மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், திருச்சி புறநகர் வடக்கு பகுதியில்தான் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் 90 சதவீத வாக்குகள் அடங்கும். இந்த முறை பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு அல்லது துறையூர் மெடிக்கல் முரளி ஆகிய இருவரில் ஒருவர் எம்.பி. வேட்பாளராக களமிறங்குவால், இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

இதனால்தான், இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டமும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காரணம், கடந்த முறை அ.தி.மு.க.வில் கேட்ட தொகுதி கிடைக்காததால், தி.மு.க.வில் ‘திடீர்’ வேட்பாளராக களமிறங்கினார் பாரிவேந்தர் (பச்சமுத்து). இவர் களமிறங்கியதால் ஒன்றியச் செயலாளர்கள்தான் (அப்போது ந.அசோகன் ஒன்றியச் செயலாளராக இல்லை)லாபமடைந்தார்களே தவிர, பொதுமக்கள் யாரும் பலனடயவில்லை. வெற்றி பெற்ற பிறகு ஒருமுறைக் கூட தொகுதி பக்கம் வரவில்லை பச்சமுத்து! இவர் போட்டியிட வில்லை என்றால் துறையூர் மெடிக்கல் முரளிதான் எம்.பி. வேட்பாளர். தற்போது, இவர் துறையூர் நகர்ப்புறத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

இதனால், தி.மு.க. சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற வேட்பாளர் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான், இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடியில் எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கிறது. ஏராளமான பொதுமக்கள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர் பகுதியில் ஆரம்பகாலத்தில் தி.மு.க.வை வளர்த்தெடுத்தவர் அர.நடராஜன். இவருடைய மகன்தான் அர.ந.அசோகன் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, பொதுமக்களிடம் தி.மு.க.வின் சாதனை எடுத்துச் செல்லும் விதமாக, கூட்டத்தை பிரம்மாண்டமாக கூட்டி அசத்தியிருக்கிறார்.

காரணம், உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியத்தில் கட்சி நிர்வாகிகளிடம் சரளமாக பழகக்கூடியவர். கட்சி நிர்வாகிகளின் நல்லது கெட்டதுகளில் கூப்பிடாவிட்டாலும், கலந்துகொள்பவர்தான் அசோகன். தனது தந்தையின் பெயரை காப்பாற்றி வருகிறார் என்று உப்பிலியபுரம் ஒன்றியம் முழுவதுமே இவருக்கு ஆதரவான குரல்தான் ஒலிக்கிறது.

எனவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகத்தான் எரகுடியில் நடந்த தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்து முடிந்திருக்கின்றது’’ என்றனர்.

எரகுடியில் எழுச்சியுடன் நடந்த பொதுக்கூட்டம், மங்கப்பட்டியில் மந்தமாகவும், ஒரு பக்கம் சாதனையுடனும், மறுபக்கம் வேதனையுடனும் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal