‘பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வட சென்னைப் பகுதியை மேம்படுத்த உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’’ என அமைச்சர் சேகர் பாபு பேசியிருக்கிறார்

அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகளை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும் அந்தந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- ‘‘2023&-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அதேபோன்று கடற்கரையை தூய்மைபடுத்துகின்ற பணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் களத்திற்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டு மென்று முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தொடர்ந்து இன்றைய தினத்தோடு 14 சட்டமன்ற தொகுதிகளில் 19 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மீதமுள்ள 15 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் காரியத்தில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையிலே பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், மாநகர போக்குவரத்துக் கழகம் இப்படி பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் குறிப்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வட சென்னைப் பகுதியை மேம்படுத்த உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார்.

அந்த வகையில் சென்னைப் பெருநகரத்தினுடைய அளப்பரியாப் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் தினந்தோறும் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்து, அப்பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, இந்த மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுகளின்போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், மோகன், நா.எழிலன், உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, கலெக்டர் அமிர்தஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal