கர்நாடகா சட்டசபை தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் அதிகளவில் களமிறங்கி இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ், எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். சுயேச்சையாகவும் ஏராளமானவர்கள் களமிறங்கி உள்ளனர்.

தற்போது கர்நாடகாவில் மொத்தம் 2,586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 790 வேட்பாளர்கள் தேசிய கட்சிகளையும், 255 பேர் மாநில கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். 640 பேர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளிலும் இருந்தும், 901 பேர் சுயேச்சையாகவும் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு சார்பில் கர்நாடகா தேர்தல் தொடர்பாக முக்கிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், வேட்பாளர்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட முக்கிய விபரங்களை சேகரித்து வெளியிட்டுள்ளது. இந்த விபரங்களை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மூலம் ஆராய்ந்து ஜனநாயக சீர்த்திருத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் பற்றிய விபரம் வருமாறு:

கர்நாடகாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் 592 பேர் ரூ.5 கோடிக்கும் அதிகமான சொத்துகளையும், 272 பேர் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடிக்கு இடையேயான சொத்துகளையும் கொண்டுள்ளனர். மேலும் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை 493 வேட்பாளர்களும், ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை 578 வேட்பாளர்களும், ரூ.10 லட்சத்துக்கு கீழ் 651 வேட்பாளர்களும் சொத்து மதிப்புகளை கொண்டுள்ளனர்.

அதன்படி பார்த்தால் மாநிலத்தில் போட்டியிடும் 2,586 வேட்பாளர்களில் 1,087 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இது வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 42 சதவீதமாகும். கடந்த தேர்தலில் 35 சதவீத வேட்பாளர்கள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்த நிலையில் தற்பாது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் கட்சி வாரியாக கோடீஸ்வர வேட்பாளர்களை கணக்கீட்டால் பாஜகவில் 224 வேட்பாளர்களில் 216 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 215 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஜேடிஸெ் கட்சியில் 170 பேரும், ஆம்ஆத்மியில் 107 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 5 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவரும், சுயேச்சைகளில் 215 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

கட்சி வாரியாக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பை கணக்கீட்டால் ட்விஸ்ட் உள்ளது. அதாவது பாஜகவை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்த மதிப்பு தான் அதிகம் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.49.83 கோடியாகவும், பாஜகவின் சராசரி சொத்து மதிப்பு ரூ.39.41 கோடியாகும், ஜேடிஎஸ் கட்சி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.24.45 கோடியாகவும், ஆம்ஆத்மி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.4.25 கோடியாகவும் இருக்கிறது. மேலும் களத்தில் இருக்கும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்பது ரூ.12.20 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal