ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது, அலுவலகத்திலிருந்து அசல் பத்திரங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய கோப்புகளை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றுவிட்டதாக ஜூலை 23ம் தேதி சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருள்களை காவல்துறையிடம் ஓபிஎஸ் தரப்பினர் ஒப்படைத்தனர்.

அந்த பொருள்கள் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அந்த பொருள்களை ஒப்படைக்கக் கோரி அதிமுக தரப்பில் சி.வி.சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களைக் கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கும் படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal