அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை முதல்முறையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இரவு 8 மணிக்கு மேல் நடந்த சசந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்றிருந்தார். இந்த சந்திப்பின் போது நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என டெல்லியில் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அரசியல் நிலவரம், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை குழப்பமில்லாமல் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசியதாகவும், அமித்ஷா எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று கேட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.
இந்த நிலையில்தான் ஒரு தனியார் ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்த அமித் ஷா. அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். & இ.பி.எஸ்.இருவரும் பிரிந்து இருக்கிறார்களே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமித் ஷா, ‘‘அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பி.ஜே.பி. தலையிட விரும்பவில்லை. அதே சமயம், அவர்கள் இருவரும் இணைந்து சுமூகமாக பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது!’’ என்று கூறியிருக்கிறார்!