‘அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான்’ என்று சொல்லிக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வம், ஏற்கனவே அ.தி.மு.க.வில் செல்வாக்கை இழந்துவிட்டார். இந்த நிலையில், அவரை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடமாட்டார் பெங்களூரு புகழேந்தி’ என்று ஓ.பி.எஸ். கூடாரத்திலிருந்தே குரல் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்தால் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கத் தயார் என ஓபிஎஸ் ஆதரவாளர் தெரித்திருப்பது பாஜக தரப்பை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாஜக தலைமை எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து வரும் சூழலில் புகழேந்தியின் இந்த பேச்சு பாஜக – அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுகவில் கடந்த 11 மாத காலமாக நிலவி வரும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதலுக்கிடையே, பாஜக தலைமையின் ஆதரவைப் பெறுவது யார் என்பதில் இரு தரப்பினர் இடையேயும் பெரும் போட்டியே நடந்தது. மோடி, அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேச ஓபிஎஸ் – எடப்பாடி இரு தரப்பினரும் போட்டா போட்டியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, நீதிமன்றங்களில் எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்புகள் அடுத்தடுத்து வந்த நிலையில், தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. இதையடுத்து எடப்பாடி தரப்பின் கை ஓங்கியுள்ளது. அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி, அமித் ஷாவை சந்தித்து ஆலோசித்தார்.

இந்த ஆலோசனையின் போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. பாஜக தலைமை எடப்பாடி தரப்புடன் மட்டும் கூட்டணி பற்றியும், சீட் பகிர்வு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியது ஓபிஎஸ் தரப்பை கடுமையாக அப்செட்டாக்கியது.

ஏற்கனவே, பாஜகவின் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி பாஜகவை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், பாஜக முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு, காங்கிரஸ் பக்கம் சாயத் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி என்றார்.

மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்திய பின்னர்தான் பிற அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. பொதுக்குழுவை கலைத்தது குறித்து நீதிமன்றம் சொல்லட்டும் என்றார். அதிமுக ஆட்சியின் போது ஊழல்வாதிகள் எனச் சொன்னவர் அமித் ஷா. தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் ரெய்டு உள்ளிட்டவற்றை செய்து காட்டியவர் அமித்ஷா. ஆனால் இன்றைக்கு ஊழல்வாதிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனே அமர்ந்து பேசி இருப்பது நியாயம் தானா என கேள்வி எழுப்பினார் புகழேந்தி.

தொடர்ந்து பேசிய புகழேந்தி, திருச்சியில் நடந்த மாநாடு என்பது தென் தமிழ்நாட்டினர் மட்டுமே பங்கேற்ற பெருங்கூட்டம். சேலத்திலும் மாபெரும் மாநாட்டை நடத்திட வேண்டும் என்று ஓபிஎஸ்ஸை கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை எங்களை காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு கேட்டு வருகின்றன.

ஓபிஎஸ் மட்டும் சம்மதித்தால் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக ஆதரவு வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். புகழேந்தியின் இந்த பேச்சு அதிமுக – பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுக்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசியிராத நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலரும் பாஜகவை சீண்டி வருகின்றனர். தனது ஆதரவாளர்கள் மூலம் ஓபிஎஸ் பாஜகவுக்கு எதிரான முதல் ஸ்டெப்பை வைக்கத் தொடங்கியிருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்போம்… விரைவில் சேலத்தில் மாநாடு என ஓ.பி.எஸ். ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தியின் கருத்து பற்றி ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

‘‘சார், ஆரம்பகால கட்டத்தில் சசிகலாவுக்கும், டி.டி.விக்கும் ‘தீவிர விசுவாசியாக’ இருந்த பெங்களூரு புகழேந்தி, திடீரென்று ஓ.பி.எஸ். விசுவாசியாக மாறிவிட்டார். ஓ.பி.எஸ். உத்தரவிட்டதால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று புகழேந்தி பேசியிருப்பது, நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டுவதற்கு சமம்.

ஏற்கனவே, திருச்சியில் மாநாடு நடத்தவேண்டும் என்று உசுப்பேற்றி விட்டு, ஓ.பி.எஸ்.ஸுக்கு 20 கோடி ரூபாய்க்கு செலவு வைத்ததுதான் மிச்சம்… அடுத்து சேலத்தில் மாநாடு நடத்த வேண்டும் என்று பெங்களூரு புகழேந்தி உசுப்பேற்றி விடுகிறார். பொதுவாக மாநாட்டிற்கு காசு கொடுத்தால் கூட்டம் கூடுவது வழக்கம்தான். ஆனால், அது ஓட்டுக்களாக மாறுமா-?- புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் கூட்டினால் கூடதான் கூட்டம் சேர்கிறது.

ஓ.பி.எஸ்.ஸை உசுப்பேத்தி… உசுப்பேத்தியே அவரை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துவிடுவார் பெங்களூர் புகழேந்தி..!’’ என்றனர்.

வடிவேலு ஒரு படத்தில், ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிட்டாங்கய்யா…?’ என்ற வசனம்தான் நினைவிற்கு வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal