அ.ம.மு.க. பொருளாளரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான ஆர்.மனோகரன் விலகிய பிறகு, அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதால், அ.ம.மு.க. கூடாரம் ஆட்டம் கண்டு வருகிறது.

அ.ம.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் அக்கட்சியில் இருந்து தி.மு.க.வில் இணைந்தனர். இன்னும் சில முக்கிய நிர்வாகிகள் தாய்க்கழகமாக அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிலையில்தான், டி.டி.வி.யின் வலது கரமாக இருந்து வந்த அ.ம.மு.க.வின் பொருளாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான ஆர்.மனோகரன், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

திருச்சி ஆர்.மனோகரனுடன் அ.ம.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இது பற்றி அவர்களிடம் பேசியபோது, ‘‘சார், எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் டி.டி.வியின் அரசியல் பாதை இருக்கும் என்றுதான் அவருடன் இத்தனை வருடங்களாக பயணித்தோம்.

டி.டி.வி.தினகரனைப் போல் ஒரு சுயநலவாதியை தமிழக அரசியல் களத்தில் பார்க்க முடியாது. கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பற்றி அவர் கலைப்படுவதே இல்லை. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித எதிர்பார்ப்புமின்றி அ.ம.மு.க.விற்காக உழைத்தோம். இதனால், நாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம்தான் எங்களை விட்டுப் போனது. இனியும் டி.டி.வி.யை நம்பிப் பயணத்தால் எங்களுக்கு எதிர்காலம் இருக்காது. அதனால்தான், எங்கள் அண்ணன் ஆர்.மனோகரன் தலைமையில் ஐயா எடப்பாடியாருடன் அணிவகுக்க, மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்திருக்கிறோம்.

நாங்கள் அ.தி.மு.க.வில் இணைந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத டி.டி.வி., எங்கள் மீது சேற்றை வாரி இறைத்து வருகிறார். இதற்கெல்லாம் அவர் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை’’ என்றனர்.

அ.ம.மு.க.விலிருந்து நிர்வாகிகள் விலகுவதற்கு என்ன காரணம் என, அக்கட்சியில் பயணிப்பவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், அ.ம.மு.க.வில் உள்ள ஒவ்வாரு நிர்வாகிகளின் மனதிற்குள்ளும், ‘நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. டி.டி.வி. தொண்டர்களைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. கட்சி நிர்வாகிகளுக்காக ஒரு தலைவர் செலவு செய்ய வேண்டும். ஆனால், கையை அறுத்துக்கொண்டு போனால் கூட, டி.டி.வி. சுண்ணாம்புக் கூட தடவ மாட்டார். இப்படிப்பட்டவரிடம் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்க முடியும்? அதனால்தான், அ.ம.மு.க. நிர்வாகிகள் ‘முடிவு’ எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்’’ என்றனர்.

டி.டி.வி.தினகரனோ, ‘‘விலை போகிறவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்… அடுத்து நாமதான் அம்மாவினுடைய ஆட்சியை அமைப்போம்’’ என்கிறார்.

ஆர்.மனோகரன் ஆதவாளர்களோ, ‘‘தாய்க்கழகத்தில் இணைவதற்கு நாங்கள் ஏன் விலை போகவேண்டும். அண்ணனை நம்பி ஏராளமான நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இன்னும் நிறையப் பேர் இணைய இருக்கின்றனர். தஞ்சை சேகர் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதை அறிந்த டி.டி.வி., அவரை கட்சியில் இருந்து நீக்கியதைப் போல் அண்ணனை (ஆர்.மனோகரன்) ஏன் நீக்கவில்லை. அம்மாவினால் அடையாளம் காட்டப்பட்டு, அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டவர் எங்கள் அண்ணன். அவர் என்றைக்குமே பணத்தை நம்பமாட்டார்… உழைப்பை நம்புபவர்’’ என்றனர்.

இனி அ.ம.மு.க.வில் முக்கியமான ‘விக்கெட்’ என்று சொல்வதற்கில்லை…!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal