தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந்தேதி 3-ம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அதற்கேற்ப பணியாற்றும் வகையில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் புதுமுகங்களை சேர்க்கும் போது இளைஞர்களுக்கு அதில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

குறிப்பாக சர்ச்சையில் சிக்கிய 2 மூத்த அமைச்சர்களின் இலாகாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் செய்வார் என்றும் தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு முன்பு 2 முறை தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் செய்திருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா பறிக்கப்பட்டு அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா வழங்கப்பட்டது. அந்த துறையில் அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு கடந்த டிசம்பர் 14-ந்தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்துள்ளதால் அமைச்சரவையில் ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றம் செய்யவும் புதுமுகங்களை சேர்க்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகிறது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய 2 மூத்த அமைச்சர்களின் இலாகாவை மாற்றம் செய்யும் போது சில அமைச்சர்களை எடுத்து விட்டு அதற்கு பதில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிதாக அமைச்சர்களை சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் அறிவாலயம் பகுதியில் வலம் வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal