அ.ம.மு.க.விலிருந்து சமீபத்தில் விலகி, அ.தி.மு.மு.க.வில் இணைந்த முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் திருச்சியில் நடந்த கூட்டத்தில் ‘திராணியற்ற தி.மு.க. தி.மு.க. அரசு!’ வெளுத்து வாங்கிய விவகாரம்தான் மலைக்கோட்டை தி.மு.க.வினரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.மனோகரன், ‘‘எனக்கு வழிகாட்டியாக இயக்கத்தில் வழிநடத்திச் சென்ற அம்மாவிற்கு நன்றி சொல்லும் விதத்திலும், எனக்கு பேராதரவு கொடுத்து என்னை வளர்த்த உங்களுக்கும் (தொண்டர்களுக்கும்) எனது முதல் நன்றி..! நான் நிறைய பேசவேண்டும்… அடுத்தடுத்த கூட்டங்களில் பேசுகிறேன்… தமிழகத்தில் தி.மு.க. ஐந்து முறை ஆட்சி செய்திருந்தாலும், தற்போதை ஆட்சிபோல் நடைபெற்றது கிடையாது. அந்தளவிற்கு, அவலமான ஆட்சி நடக்கிறது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திராணியற்ற முதல்வராக இருக்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் இரண்டாண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக, தி.மு.க.வின் நிதியமைச்சரே பேசிய வீடியோ வெளியாகியிருக்கிறது. திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர் எம்.எல்.ஏ.வாக வருவதற்கு முன்பு கிழக்கு தொகுதி மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் அளித்தார்… போக்குவரத்து நெரிசலை குறைக்கிறேன் என்றார்… மலைக்கோட்டைக்கு செல்ல ‘ரோப் கார்’ வசதி செய்து கொடுக்கிறேன் என்றார்… என்ன நடந்தது ஒன்றுமே நடக்கவில்லை. தற்போது, ‘மலைக்கோட்டைக்கு ரோப் கார் சாத்தியமில்லை’ என்கிறார்.

இதைத்தான் அம்மா இருக்கும் போதே , நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போதே சொன்னேன். வேண்டுமானால், ‘லிப்ட்’ வசதி அமைத்துக்கொள்ளலாம் என்று அப்போதே நான் சொன்னேன். அதைத்தான் தற்போது சொல்கிறார்கள்! தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று, அக்கட்சிக்கு எதிராகவே சாலை மறியல் செய்த ஒரே எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ்!

எனவே, நாங்கள் மக்களுக்கு செய்து கொடுக்கக்கூடிய வாக்குறுதிகளைத்தான் அளித்தோம். அதனை செய்துகொடுத்தோம். ஆனால், தி.மு.க. மக்களை ஏமாற்றக்கூடிய வாக்குறுதிகளை அளித்து வருகிறது. தி.மு.க.வின் இரண்டாண்டு ஆட்சியிலேயே மக்கள் வெறுப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்கள். ‘அடுத்து ஆட்சி மாற்றம் வராதா?’ என்ற ஏக்கம் அவர்களது விழிகளில் தெரிகிறது.

எனவே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை கட்டிக் காத்து சிறப்பாக வழிநடத்தக் கூடிய வல்லமை படைத்தவராக எடப்பாடியார் விளங்கிவருகிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு சரியான பாடத்தை புகட்டுவோம்’’ என்று பேசினார்.

தாய்க்கழகத்தில் மீண்டும் இணைந்த ஆர்.மனோகரன் முதன் முதலாக பேசிய பேச்சு ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal