திமுக ஆட்சி எப்போதும் போகும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என தமிழகம் முழுவதும் குரல் கேட்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- தொழிலாளர்களுக்கு 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பதே அடிப்படை. ஆனால் இந்த அடிப்படையை மாற்றி திமுக அரசு 12 மணி நேர வேலை என்று அறிவித்தார்கள். இதை திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டு மொத்த தொழிற்சங்கங்களும் எதிர்ப்பை தெரிவித்ததால் அஞ்சி நடுங்கி முதலமைச்சர் ஸ்டாலின் அதை ரத்து செய்துள்ளார் .

அதிமுக ஆட்சியில் என்ன நடத்தது, திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று பேசினார்கள், இன்று எதுவுமே செய்யாமல் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. திமுக ஆட்சி எப்போதும் போகும், அதிமுக ஆட்சி எப்போது மலரும் என தமிழகம் முழுவதும் குரல் கேட்கிறது.

எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லும் ஸ்டாலின் ரூ.,30,000 கோடி ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காததுது ஏன்? அதிமுக ஆட்சியில் ஊழல் ஊழல் எனக் கூறிய ஸ்டாலின் தற்போது வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்? எனவும் இபிஎஸ் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனே வழக்கு தொடுக்கிறார்கள். தவறுகளை சுட்டிக்காட்டினால் பொய் வழக்கு தொடுப்பது தான் ஜனநாயகமா? சமூகவலைதளங்களில் திமுகவை விமர்சித்தால் உடனே கைது இதுதான் ஜனநாயகமா என வினவியுள்ளார். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். எந்த துறையாக இருந்தாலும் லஞ்சம் வாங்கிவிட்டு தான் பிரச்சனையை தீர்க்க முன்வருகிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை குற்றங்களில் நம்பர் 1 மாநிலம் தமிழகம். விருத்தாசலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நான் கேள்வி எழுப்பிய பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தூத்துக்குடியில் மணல் கடத்தலை எதிர்த்த விஏஓவை அலுவலகம் புகுந்து வெட்டிக்கொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு என்னை பார்த்து பயம் வந்துவிட்டது. நான் கேட்கும் கேள்விகள் நேரலை செய்யப்படுவதில்லை, ஸ்டாலின் பதில் மட்டும் தான் வெளியிடப்படுகிறது. சட்பட்பரேவையில் நான் பேசியதை நேரலை செய்திருந்தால் ஸ்டாலினை மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.

அம்மா உணவகத்திற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருகின்றனர். நிதி குறைப்பால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைக்க நிதி உள்ளது. பசியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவு அளிக்கும் அம்மா உணவகத்திற்கு நிதி இல்லையா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal