கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை மாநகர் முழுவதும் குப்பைத் தொட்டிகளை சுற்றிலும் ‘பிளீச்சிங்’ பவுடரைப் போடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பிளீச்சிங் பவுடரையே காண முடியவில்லை.

கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றினார். அதன் பிறகு கடந்த 10 வருடங்களாக அ.தி.மு.க. ஆட்சி நடந்து முடிந்து, மீண்டும் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார்.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை தெருவுக்கு தெரு குப்பைத் தொட்டிகள் இருக்கும். இந்த குப்பைகளை எடுத்துச் செல்ல சென்னை மாநகராட்சி தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடுத்திருக்கிறது. தனியார் நிறுவன ஊழியர்கள்தான் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, குப்பைத் தொட்டியை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் போடுவதில்லை. இது தொடர்பாக குப்பைகளை அள்ளும் தொழிலாளிகளிடம் கேட்ட போது, ‘‘சார், எங்களுக்கு பிளீச்சிங் பவுடரே கொடுப்பதில்லை… கொடுத்தால் நாங்கள் போடாமல் இருக்கப் போகிறோமா?’’ என்றனர்.

குப்பைகளை அள்ளும் தனியார் நிறுவனத்தின் சூப்பர் வைசரிடம் பேசினோம், ‘‘சார், இதற்கு முன் டெண்டர் எடுத்த கம்பெனி பிளீச்சிங் பவுடரை வாங்கிக் கொடுத்தார்கள். தற்போது டெண்டர் எடுத்துள்ள நிறுவனம் பிளீச்சிங் பவுடர் கொடுப்பதில்… நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சொல்லிங் கொள்ளுங்கள். எங்களுக்கு கொடுத்தால்தானே நாங்கள் போடுவோம்’’ என்றார்.

இது தொடர்பாக சென்னை மேயர் பிரியாவை தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘‘சார், நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்’’ என்றார். அதற்கு, ‘‘வடபழனியில் உள்ள அழகிரி நகர் 6வது தெருவில் இருந்து பேசுகிறோம்… இங்குள்ள குப்பைத் தொட்டிகளில் துர்நாற்றம் அடிக்கிறது. பிளீச்சிங் பவுடரே போடுவதில்லை’’ என்றோம்! ‘‘அப்படியா..!’’ என்றவர்! அவ்வளவுதான். ‘‘நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார்.

சென்னை வடபழினியில் மட்டுத்தான் இப்படி இருக்கிறதா என்று, தி.நகர் உள்ளிட்ட அனைத்துப் (அமைச்சர்கள் தங்கியிருக்கும் பகுதிகளைத் தவிர) பகுதிகளிலும் சுற்றிப் பார்த்தோம். அங்குள்ள குப்பைத் தொட்டிகளிலும் துர்நாற்றம்தான் வீசியதே தவிர, பிளீச்சிங் பவுடரே போடவில்லை!

சென்னையில் ஒரு நாள் மழைக்கே துர்நாற்றம் விசுகிறது… முன்பு மேயராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவாரா என்பதுதான், மாநகர் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

அப்படியென்றால் பிளீச்சிங் பவுடர் டெண்டர் எடுத்தவர் யார்…?-

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal