‘தமிழக அரசியல்’ இணையதளத்தில் அ.ம.மு.க. பொருளாளர் திருச்சி மனோகரன் தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணைகிறார் என்று ஒரு மாதத்திற்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் படியே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் திருச்சி மனோகரன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதையடுத்து அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள பல்வேறு நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக பொருளாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திருச்சி ஆர்.மனோகரன், அக்கட்சியில் இருந்து விலகி சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காக தீவிரமாக பணியாற்றியவர் மனோகரன். அதனால். அதிமுக ஆட்சியில் மனோகரனை அரசு கொறடாவாக ஜெயலலிதா நியமித்தார்.
அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த மனோகரன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியில் முக்கியபொறுப்புகளை வகித்த மனோகரன். திருச்சி ஆர்.மனோகரனைப் பொறுத்தளவில் எங்கு இருக்கிறோமோ அங்கு, ஜாதி, மத பேதமின்றி உண்மையாகவும், விசுவாசமாகவும் உழைக்கக் கூடியவர். அதானால்தான், ஒன்றிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.
திருச்சி ஆர்.மனோகரன் அ.தி.மு.க.வில் இணைந்தது பற்றி மலைக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உண்மையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.
‘‘சார், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார், ‘ஒரு சிலரைத் தவிர, உண்மையான அ.தி.மு.க. நிர்வாகிகள் எங்களிடம் வரவேண்டும்’ என அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார். சிலர் பதவிக்காக ஓ.பி.எஸ்.ஸிடமும், டி.டி.வி.யிடடும் இருக்கின்றனர். ஆனால், ஆர்.மனோகரன் ‘பொருளாளர்’ என்ற பதவியையே உதறித் தள்ளிவிட்டு தாய்க்கழகத்தில் இணைந்திருக்கிறார். இது மலைக்கோட்டை மாவட்டத்திற்கு மிகவும் நல்லது.
ஏனென்றால், மலைக்கோட்டையைப் பொறுத்தளவில் முத்தரையைர் இன மக்கள்தான் அதிகம். அதற்கடுத்து முக்குலத்தோர் சமுதாயமான கள்ளர் அதிகளவில் இருக்கிறார்கள். அடுத்து, ரெட்டியார் உள்ளிட்ட பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
இப்படி பலதரப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் அரவனைத்துச் செல்லக்கூடியவர்தான் ஆர்.மனோகரன். இவரது செயல்பாடுகளைப் பிடித்துதான், ஜெயலலிதா இருக்கும்போது மாநகர் மாவட்டச் செயலாளராக பத்துவருடம் கோலோச்சினார். அப்போது, மலைக்கோட்டையில் அ.தி.மு.க. அசைக்க முடியாத சக்தியாக இருந்தது.
அதன் பிறகு, ஜாதி அரசியல், உட்கட்சி பூசல் என மலைக்கோட்டை அ.தி.மு.க. தத்தளித்து கிடக்கிறது. ஆர்.மனோகரன் போன்ற கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருக்கக் கூடியவர்களால், இனி அ.தி.மு.க. மலைக்கோட்டையில் மீண்டும் எழுச்சி பெறும். அம்மாவால் மா.செ.வாக நியமிக்கப்பட்ட மனோகரன், விரைவில் எடப்பாடியாரால் மாநகர் மா.செ.வாக நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான், மலைக்கோட்டை மக்களின் விருப்பமாக இருக்கிறது’’ என்றனர்.
ஏதோ, நல்லது நடந்தால் சரிதான்..!