தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழக நிறுவனங்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது தினந்தோறும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அரசு பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. 2017-&18-ம் நிதியாண்டில் சராசரி தினசரி இழப்பு ரூ. 9 கோடியாக இருந்தது. சமீபத்தில் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி 2021-&-22-ம் ஆண்டில் தினசரி இழப்பு ரூ.18 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனாலும் சராசரி தினசரி இழப்பு 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை ரூ.14.8 கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.12,007 கோடி வருவாய் கிடைத்தது. இதில் ரூ.6,705.69 கோடி வருவாய் டிக்கெட் கட்டணம் மூலம் வந்தது. மேலும் ரூ.5,256.86 கோடி வருவாய் விளம்பரம் உள்ளிட்ட இதர வகைகளில் இருந்து கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.16,985 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ.9,015 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது 53 சதவீதம் ஆகும். எரிபொருளுக்காக ரூ.4,815.94 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது 28 சதவீதம் ஆகும். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு இலவச பயணத்தை வழங்கி வருகிறது. இதற்கான கட்டணத்தை அரசு, போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறது.

கடந்த 2020&-21-ம் ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு மூலம், போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்கும் தினசரி வருவாய் ரூ.73.64 லட்சமாக குறைந்தது. அது 2022-&23 நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை தினசரி வருமானம் ரூ.1.7 கோடியாக உயர்ந்துள்ளது.

செலவுகளை குறைப்பதற்காக சமீப ஆண்டுகளாக போக்குவரத்து கழக நிறுவனங்கள் பல வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. இதன் காரணமாக 2019-&20 மற்றும் 2022-&23 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு நாளைக்கு அரசு பஸ்களின் மொத்த பயண தூரம் 83.65 லட்சம் கிலோ மீட்டரில் இருந்து ரூ.77.81 லட்சம் கிலோ மீட்டராக குறைந்துள்ளது. பஸ் சேவைகளின் எண்ணிக்கையும் 19,290-ல் இருந்து 18,723 ஆக குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் எரி பொருள் செலவுகள் ரூ.955 கோடி அதிகரித்துள்ள போதிலும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் பஸ் கட்டணம் உயரவில்லை.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கையில் தனியார் பேருந்துகள் மட்டும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஒரு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற துறையூர் கிளைமேலாளர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘சார், நான் ஒரு கிளைக்கு மட்டும்தான் மேலாளர். நீங்கள் கேட்ட கேள்வி புரிகிறது. அரசு போக்குவரத்துக் கழகம் மட்டும் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது. தனியார் போக்குவரத்துக் கழகம் மட்டும் ஏன் லாபத்தில் இயங்குகிறது என்று! அதற்கு காரணம் அரசாங்கம்… ஆளுங்கட்சிதான்!

உதாரணமாக, தனியார் போக்குவரத்து ஊழியர்கள் முதலாளிக்கு எவ்வளவு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்க முடியுமோ அதை கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மாதமானால் குறைந்தது 30 ஆயிரம் (ஓட்டுநர் & நடத்துநர்) முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகின்றனர். சம்பளம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், ஒவ்வொரு பணிமனையிலும் ‘லைட் டூட்டி’ என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் ‘சும்மா உட்கார்ந்து’ சம்பளம் வாங்குகின்றனர்.

அதே போல், பணிமனைகளில் வாங்கப்படும் ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ஸுக்கும் லஞ்சம் வாங்குகின்றனர். இப்படி இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அமைச்சருக்கு வேறு கொடுக்க வேண்டும்… இதே நிலை நீடித்தால், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, ஓய்வு கால பலன்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே, தனியார் பேருந்து ஊழியர்களைப் போல், அரசு பேருந்து ஊழியர்கள் வேலை பார்க்க வேண்டும். ஆனால், ‘அரசியல்’ அவர்களை வேலை பார்க்காமல் இருக்கச் சொல்கிறது… எனவே, இதே நிலை நீடித்தால், அரசு போக்குவரத்துக் கழகத்தில் எதிர்காலம் பற்றி சிந்தித்துக் கூட பார்க்க முடியாது’’ என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal