மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்… உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை!!! என தலைமைச் செயலகம் அடங்கிய புகைப்படத்துடன் அஜித்திற்கு மதுரையில் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை ரசிகர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் அதிக அளவு ரசிகர்களை கொண்டவர் நடிகர் அஜித்குமார், இவரது படங்கள் வெளியானால் திரையரங்கில் விழாக்கோலம் தான். அந்த வகையில் ரசிகர் பட்டாளர்களை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சிவாஜி – எம்.ஜி.ஆர்., ரஜினி – கமல் என்ற தமிழ் சினிமா நடிகர்களின் போட்டி இணை வரிசையில் அடுத்த தலைமுறையாக வந்ததுதான் விஜய் – அஜித் இணை. இருவருமே இன்று வரை பல கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளனர். அஜித் திரைப்படமான வலிமையின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் செய்த செயல்கள் விசித்திரமானவை. அந்த அளவிற்கு ரசிகர்கள் அஜித் மீது அன்பு வைத்துள்ளனர்.
ஆனால் நடிகர் அஜித்தோ ரசிகர்கள் தங்களது குடுங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தனது ரசிகர் மன்றத்தை முழுவதுமாக கலைத்து விட்டார். தற்போது தனக்கு மிகவும் பிடித்த பைக் மூலம் நாடு முழுவதும் சுற்றுபயணம் செய்து வரும் அஜித்திற்கு நாளை (மே 1) பிறந்த நாள். அவர் தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மதுரை அஜித் ரசிகர்கள் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒட்டி உள்ளனர். அந்தப் போஸ்டரில் ‘‘மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்… உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை!!!’’ என தலைமைச் செயலகம் அடங்கிய புகைப்படத்துடன் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் விதமாக மதுரையில் பல்வேறு பகுதிகளில் அஜித் ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை போஸ்டர் ஒட்டி தெரிவித்துள்ளனர்.