‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம் – ஒழுங்கு கெட்டுவிடும்’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சொல்லிவருவார். இன்றைக்கு அது நிஜமாகி வருகிறதோ என தோன்றுகிறது.

தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பு அடங்கும் முன்பாக சேலம் ஓமலூர் தாலுகாவில் விஏஓ ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மணல் கடத்தல் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்சிஸ் கடந்த வாரம் தனது அலுவலகத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென அலுவலகத்திற்குள் புகுந்த இருவர், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படுகொலைக்கு அரசியல் கட்சித்தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவிட்டு

இதே போல நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் ஒன்றியத்தில் மானத்தாள் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக தாரமங்கலம் பொத்தியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அந்த கிராமத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 18 ஆம் தேதி அப்பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முத்துராஜ் என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்திச் சென்றுள்ளார். இதனை பார்த்த வினோத்குமார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து கனிமவளத்துறையினரிடம் ஒப்படைத்தார். கனிமவளத்துறையினர் இரு வாகனத்தையும் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துராஜ் மற்றும் ஓட்டுநர் விஜி ஆகிய இருவர் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம் விஏஓ வினோத்குமார் தனது அலுவலகத்துக்கு இருசகக்கர வாகனத்தில் வந்த போது, முத்துராஜ் என்பவர் வழிமறித்து தனது வாகனத்தை பறிமுதல் செய்ததால் தொழில் பாதிக்கப்பட்டதாகக் கூறி வினோத்குமாரை தாக்கி செல்போனை பறித்ததோடு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு வெட்டுவதற்கு முயன்றுள்ளார். உன்னை கொலை செய்தால் தான் என்னால் மண் கடத்தி விற்பனை செய்ய முடியும் எனக்கூறி தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த வீச்சரிவாளை எடுத்து கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்ய முயற்சி செய்தார் முத்துராஜ். அதனை கண்டதும் விஏஓ வினோத் குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். முத்துராஜ் அவரை விரட்டி வந்து கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் இருந்து தப்பி ஓடிய விஏஓ வினோத்குமார், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மேலும் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்த முத்துராஜை கைது செய்ய வேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு உடனடியாக வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே அவர் மீது கொடுத்த புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது கொலை மிரட்டல் விடுத்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் தினம் தினம் உயிருக்கு பயந்து வாழ வேண்டியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal