தமிழக அரசியல் களத்தில் இன்றைக்கு ஓ-.பி.எஸ்.ஸின் நிலைதான் ‘அதோ கதி’ என்றிருக்கிறது. அவரிடம் இருக்கும் சில நிர்வாகிகளும் எடப்பாடியிடம் ஐக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது பற்றி ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், திருச்சி மாநாட்டிற்கு பிறகு ‘மேலிடமே’ திரும்பிப் பார்க்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால், அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை, அதற்கு நேர்மாறாக எடப்பாடி சந்தித்துப் பேசியிருக்கிறார் அமித் ஷா!
ஏற்கனவே பலமுறை சந்திக்க மோடி, அமித் ஷாவிடம் அனுமதி கேட்டிருந்தார் ஓ.பன்னீர்! ஆனால், இருவருமே சந்திக்க விரும்பவில்லை. இந்த நிலையில்தான், பிரதமர் மோடி உத்தரவின் பேரிடம் அமித் ஷாவை சந்தித்து பேசி, தனக்கான அங்கீகாரத்தை பெற்று வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திருச்சியில் நடந்த மாநாட்டிற்கு வைத்திலிங்கம் தன் பங்கிற்கு சில கோடிகளை மட்டும் இறக்கினார். ஆனால், ஓ.பி.எஸ். தரப்பு 20 கோடி ரூபாய்க்கு மேல் இறக்கியும் திருச்சியை திணறடிக்க முடியவில்லை. அதுவும், மாநாடு போல் நடக்கவில்லை… சம்பிரதாயத்திற்கு நடந்த பொதுக்கூட்டம் போல் ஒரு சில மணி நேரங்களில் முடிந்து விட்டது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினர்களை ‘லூசு’ என்று பேசுவதற்காகவா 20 கோடி ரூபாயை அண்ணன் செலவு செய்தார்? என்று அவரது அணியில் உள்ளவர்களே வியந்து பேசுகிறார்கள். மேலும், அண்ணனுக்கு 20 கோடி ரூபாய் பணம் விரயமானதுதான் மிச்சம் என ஓ.பி.எஸ்.ஸே தனக்கு நெருக்கமானவர்களிம் புலம்பி வருகிறாராம். இனி, ஓ.பி.எஸ்.ஸுக்கு தனிக்கட்சி ஆரம்பிப்பத்தைத் தவிர வேறுவழியில்லை. எனவே, கையில் இருப்பதை அண்ணன் கரைக்க விரும்பமாட்டார். எனவே, காவி துண்டை போடவாவது ‘மேலிடம்’ அனுமதிக்குமா என்ற யோசனையில் இருக்கிறார்’’ என்று அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்டனர்.
ஓ.பி.எஸ். மலைபோல் நம்பியிருந்த சசிகலா, டி.டி.வி.யும் கைவிட என்ன காரணம் என டெல்டா வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், ஆரம்பத்திலேயே எடப்பாடி பழனிசாமியை நம்பவேண்டாம் என்று சின்னம்மா (சசிகலா) பலமுறை கூறினார். அப்போது, ‘பதவி சுகம்’ ஓ.பி.எஸ்.ஸின் கண்ணை மறைத்துவிட்டது. தற்போது, ஒருசில நிர்வாகிகளை வைத்துக்கொண்டு, மீண்டும் சின்னம்மாவை வைத்து அரசியல் செய்வதை அவர் விரும்பவில்லை. டி.டி.வி.தினகரனும் எத்தனையோ முறை ஓ.பி.எஸ்.ஸிடம் சொல்லிப் பார்த்தார். அப்போதெல்லாம் கேட்காமல், தற்போது தனக்கு வயிற்று வலி என்றதும் வந்தால் யார் ஆதரவு கொடுப்பார்கள்’’ என்றனர்.
டெல்லி ‘மேலிடமோ’ ‘அரசியல்’ செய்வதற்கு ஓ-.பி.எஸ். சரியான நபர் கிடையாது என்று முடிவு செய்துதான் கைவிட்டுவிட்டது என்கிறார்கள். கடைசியில், ஒரு பைசா கூட செலவு செய்யாமல் இருந்த ஓ-.பி.எஸ்.ஸுக்கு திருச்சியில் 20 கோடி ரூபாய் விரயமானதுதான் மிச்சம்..!