‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முயற்சித்து வருகிறது. அதற்கு முன்னோட்டமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கும் முன்கூட்டியே நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி யிருக்கிறது.

இது தொடர்பாக டெல்லி வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், வரவிருக்கின்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று பா.ஜ.க. கடுமையாக போராடி வருகிறது. காரணம், அங்கு காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில்தான், கர்நாடகத் தேர்தலில் மோடி, அமித் ஷா, அண்ணாமலை ஆகியோர் பிஸியாக இருந்த நிலையிலும், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அமித் ஷா கடும் நெருக்கடிகளுக்கு இடையே உடனடியாக நேரம் ஒதுக்கினார்.

எடப்பாடி பழனிசாமி பேசிய அமித்ஷா, ‘கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாங்கள் தயாராகிவிடுவோம். தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளை அரவனைத்து தேர்தலை சந்தித்தால்தான் வெற்றி பெறமுடியும். இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதையாவது பேசி, அதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படுவதை தவிர்க்கவேண்டும்’’ என்றவர் ஓ.பி.எஸ். மாநாட்டை பற்றியும், அதன் புள்ளிவிபரத்தையும் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அமித் ஷா, ‘‘எங்களுக்கு 25 சீட் கொடுத்தாகவேண்டும் அல்லது 20 சீட் கொடுங்கள் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் பகிரிந்து கொடுத்துக்கொள்கிறோம். இதனை இப்போதே சொல்லிவிடுங்கள். தமிழகத்தைப் போலவே பிற மாநிலங்களிலும் நாங்கள், கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முதலில் யோசித்த எடப்படி பழனிசாமி, அதன் பிறகு தலையசைத்து விட்டுத்தான் வந்திருக்கிறாராம். அமித்ஷாவில் பேச்சில் அப்படியொரு கம்பீரத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறார்கள் எடப்பாடி தரப்பினர். அதுவும், அண்ணாமலை முன்பு அமித் ஷா பேசியதுதான், அவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க.விடம் உடனடியாக தொகுதிகளை கேட்கக் காரணம், நாடாமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டம் போட்டியிருக்கிறதாம் பா.ஜ.க.! அதாவது, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆட்சி செய்யும் காலம் ஒரு வருடங்கள் இருந்தாலும், அந்த மாநிலங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் நடத்த திட்டமிட்டிருக்கிறதாம் பா.ஜ.க.!

காரணம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முன்னோட்டத்திற்காக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறோம் பாருங்கள் என்பதை மற்ற கட்சிகளுக்கு உணர்த்த முடிவு செய்திருக்கிறது பா.ஜ.க.! அதே போல் தமிழகத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் கர்நாடகத் தேர்தலுக்கு பிறகு ‘அமித் ஷா ஆபரேஷன்’ ஆரம்பமாகும்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி விசிட் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்! அதே சமயம் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் இதெல்லாம் சாத்தியம், இல்லாவிட்டால், ‘மேலிடம்’ யோசிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal