பிரதமர் மோடி கிறித்தவப் பாதிரிமார்களை சந்தித்து பேசியுள்ள நிலையில், அது வெறும் சம்பிரதாய சந்திப்பு, பிரதமரின் சந்தர்ப்பவாத அரசியல் எனவும் விமர்சித்துள்ளார் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான இனிகோ இருதயராஜ் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக இனிகோ இருதயராஜ் கூறியிருப்பதாவது, ‘‘நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை, வெறியாட்டங்கள், வெறுப்புப் பேச்சுக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறன. அரங்கேற்றப்படும் அந்த வன்முறைகளை மேலும் உசுப்பேற்றும் வகையில் பா.ஜ.க தலைவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. ஆனால், அதே தலைவர்கள் மறுபுறம் கிறித்தவப் பாதிரிமார்களை சடங்கிற்காக சந்தித்து, சிரித்து, படமெடுத்து அதனை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் மூலம் கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை அறுவடை செய்து கொள்ள முடியும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் குறிப்பிடத்தக்க பெருமை, அதன் பன்முகத் தன்மையாகும். ஆனால் இந்த பன்முகத்தன்மைக்கு வேட்டு வைத்தப் பிறகு, கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை எப்படி பாஜகவினரால் அறுவடைச் செய்ய இயலும்? கடந்த 9 ஆண்டுகளில் கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதல்கள் ஒன்றா? இரண்டா? அவர்கள் பட்ட வலிக்கு அளவேதும் இருக்கிறதா? நூற்றாண்டுகள் கடந்தாலும் மாறாத அந்த வலிக்கு, எந்த கைக்குலுக்கலும், முகஸ்துதியும் மருந்தாகி விடாது. இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் உடைமைகள், வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள் குறி வைத்து தாக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தங்கள் மீதான தாக்குதல் குறித்து புகார் அளிக்கச் செல்லும் கிறிஸ்துவ பாதிரியார்கள் சிறையில் வைத்து அச்சுறுத்தப்படுகிறார்கள். அது மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் அளிக்கும் புகார்கள் பல மாநிலங்களில் பதிவு செய்யப்படுவதும் கிடையாது.

குறிப்பாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வெளிப்படையாகவே கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறையால் கிறிஸ்துவ சகோதரர்கள் 1500க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். கிறிஸ்துவ மக்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகளும், புகார்களும், ஜாமினில் வெளிவர முடியாத வகையிலேயே பதிவு செய்யப்படுகின்றன. சிறுபான்மையினர் ஆடை சுதந்திரமும் பல மாநிலங்களில் பறிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிய அரசே தடை விதித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. ஒரு மிகப்பெரிய அமைப்பில் மைனாரிட்டியாக இருக்கக்கூடிய மக்கள் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்ன உணவை சாப்பிடக்கூடாது என்பவற்றை கூட அரசாங்கமே நிர்ணயிக்கும் அவலம் இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உச்சக்கட்டமாக சிறுபான்மை மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அதற்கு உதாரணமாக, கர்நாடகாவில் அண்மையில் முஸ்லிம்களுக்கான 4% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடலாம்.

முஸ்லிம்களின் ஓட்டு தங்களுக்கு தேவை இல்லை என கர்நாடகா பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பேசுகிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஒரே ஆண்டில் 22,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளை குடியரசுத் தலைவரோ, பிரதமரோ இது வரை கண்டித்ததாக தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால், 2024 ஆம் நடக்கவுள்ள மக்களவை தேர்தலுக்காக, கிறிஸ்துவர்களின் ஆதரவை பெற நாடு முழுவதும் கிறிஸ்தவ ஆயர் பெருமக்களை நேரில் சந்திக்கும் நாடகத்தை பா.ஜ.க. அரங்கேற்றி வருகிறது. அண்மையில் ஈஸ்டர் தினத்தில் டெல்லியில் உள்ள இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை மேற்கொண்டு அது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோவையும் ட்விட்டரில் பதிவிட்டு பெருமிதம் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் பிரதமர் மோடி, அம்மாநிலத்தை சேர்ந்த 8 பிஷப்புகள் கொச்சியில் சந்தித்துள்ளார். அப்போது , கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடம் பிஷப்புகள் பேசியுள்ளனர். ஏற்கனவே வட இந்திய பிஷப்புகள், குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து இதே பிரச்சினையை முறையிட்டு தீர்வை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்’’ என்று கூறியிருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal