ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் முதற்கட்ட சோதனையில் நிலங்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்திருப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.

தென் மாநிலங்களில் கட்டுமான நிறுவனங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் வீடுகளைக் கட்டி செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மட்டும் சிஎம்டிஏ சார்பில் வீடுகள் கட்ட உடனடியாக அனுமதி வழங்கப்பட்டு வருவதாகத் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இந்நிறுவனத்துடன் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குத் தொடர்பான 50க்கும் அதிகமான இடங்களில் இரண்டாம் நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும், சுதிர், பிரவின், பாலா, ஆதவ் அர்ஜூன் அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே மோகனின் மகன் கார்த்திக் உள்ளிட்ட 19 நிறுவனங்கள், வீடுகளில் சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில், ஜி ஸ்கொயர் நிறுவனம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிக அளவிலான நிலங்கள் வாங்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் வாங்கிய நிலங்களின் விபரம், பத்திரப்பதிவு செய்திருப்பது குறித்து எல்லாம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

இதில் சில ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளது. முதற்கட்ட சோதனையில் நிலங்களின் மதிப்பை குறைத்து மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்திருப்பதும், அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்து இருப்பதும் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சோதனை இன்னும் இரண்டு மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. இந்த சோதனை முடிவில் தான் என்ன ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளது, ரொக்க பணம் கைப்பற்றபட்டுள்ளதா போன்ற விவரம் தெரியவரும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூர், மைசூர், பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் சோதனை நடைப்பெற்று வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal