வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பணியை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர அதிரடியான வியூகங்களை வகுத்து செயல்பட தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வை வீழ்த்த கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையமும் தமது பங்காக தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் முதன்முதலாக வி.வி.பி. ஏ.டி. என சொல்லப்படும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் மொத்தம் 17.4 லட்சம் வி.வி.பி.ஏ.டி. கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதில் பழைய மாடல் கருவிகளான எம்-2 வகை கருவிகளும் இடம்பெற்று இருந்தன. இதனை முற்றிலுமாக நீக்கிவிட்டு நவீன எம் எம்-3 வகை கருவிகளை முழுவதுமாக பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி புதிய எந்திரங்கள் தயாரிக்கும் பணியும், நவீன முறையில் மேம்படுத்தும் பணியும் மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் செய்து வருகின்றன.

இதில் மொத்தம் தயாரிக்கப்பட உள்ள 8.92 லட்சம் வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் 2.7 லட்சம் எந்திரங்கள் பழைய எம்-2 மாடலாக உள்ளது. இதற்கு மாற்றாக புதிய எந்திரம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று முன்பு பராமரிக்கப்பட்டு வந்த 3.4 லட்சம் எந்திரங்களுக்கு பதிலாகவும் புதிய எந்திரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் நல்ல முறையில் இயங்கும் 2.4 லட்சம் எம்-2 வகை எந்திரங்களை எம்-3 வகையாக தரம் உயர்த்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மொத்தத்தில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அதனை திறம்பட நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் ஆணையம் அதிரடியாக தொடங்கியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal